தன் ரத்தத்தால் காந்தியை வரைந்த பாகிஸ்தானியர்

திங்கள், 3 அக்டோபர் 2011 (11:45 IST)
இந்திய, பாகிஸ்தான் மக்கள் பகைமையை மறந்து ஒற்றுமையாக வாழவேண்டியதை வலியுறுத்தி பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் வசீல் என்பவர் தன் ரத்தத்தால் காந்தியின் படத்தை வரைந்தது பரபரப்பாகியுள்ளது.

புது டெல்லியில் காந்தி தர்ஷனில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான நேற்று வசீல் இத்தகைய ஓவியத்தை வரைந்தார்.

"பகைமையை மறந்து இருநாட்டவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்த இதைவிட சிறந்த வழி எனக்குத் தெரியவில்லை. மகாத்மா காந்தி அகிம்சையை வலியுறித்தினார் என்பதை நான் அறிவேன். நான் அவரை என் ரத்த்த்தால் வரைந்தேன் என்றால் அது இருதரப்பினரிடையேயும் இனி ஒரு துளி ரத்தம் கூட சிந்தக் கூடாது என்பதை அறிவுறுத்தவே" என்றார் வசீல்.

வசீல் லாகூரைச் சேர்ந்தவர் இவர் காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே புது டெல்லி வந்துள்ளார்.

"எனது இந்தப் படத்திற்கு மக்களிடையே ஆதரவாகவும், வருந்தியும் எதிர்வினைகள் வந்தன. ஆனால் இது இதயங்களை உருகச்செய்யும் என்று நம்புகிறேன்".

"பெயிண்டர் பாபு" என்று செல்லமாக லாகூரில் அழைக்கப்படும் அப்துல் வசீல் சிறு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே தன் ரத்தத்தினால் பேனசிர் பூட்டோ மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரது உருவத்தையும் வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் காந்தியை தன் ரத்தத்தால் வரைந்த படத்தை காந்தியின் பேத்தியான தாரா காந்தியிடம் அளித்தார்.

காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி சர்வதேச அகிம்சை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்