ஜூன் 27ல் இந்தியா- பிரான்ஸ் ராணுவ கூட்டுப்பயிற்சி

திங்கள், 15 ஜூன் 2009 (16:49 IST)
இந்தியா- பிரான்ஸ் கடற்படைகளின் 'வருணா' கூட்டு ராணுவப் பயிற்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

கடந்த 7 ஆண்டுகளாக இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் கடற்படைகளில் ஒன்றிணைந்து 'வருணா' என்று அழைக்கப்படும் கூட்டு ராணுவப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளின் கடற்படைகளை பலப்படுத்தும் வகையிலும், நட்புறவை வலுப்படுத்தும் வகையிலும் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும், இந்த ராணுவப் பயிற்சி இந்திய கடற்பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு, முதல் முறையாக பிரான்சில் உள்ள பிரிட்டானியா கடல் பகுதியில் நடைபெறுகிறது. வரும் 27ம் தேதி தொடங்கும் இந்த பயிற்சி ஜூலை 4ம் தேதி வரை நடைபெறும்.

இந்த பயிற்சியில் இந்திய தரப்பில், ராணுவ தளவாடங்கள், ஆதித்யா கப்பல் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. பிரான்ஸ் தரப்பிலும், கடற்படை கப்பல்கள் மற்றும் கடற்படைக்கு சொந்தமான நவீன ஹெலிகாப்டர்கள் இடம்பெறுகின்றன.

கடந்த 2006ம் ஆண்டில் இந்திய பிரதமர் மற்றும் பிரான்ஸ் அதிபர் ஆகியோர் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து பல்வேறு கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சோமாலியா கடற்கொள்ளையர்களை அழிப்பதிலும் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்