ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்துல் கலாம் விரும்பவில்லை!

திங்கள், 18 ஜூன் 2012 (17:11 IST)
FILE
இந்த விவகாரத்தை ஒட்டுமொத்தமாகவும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளையும் பரிசீலிக்கும்போது நான் ஜனாதிபதி தேர்தலில் நிற்பது உசிதமல்ல என்ற முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார் அப்துல் கலாம்.

காங்கிரஸ் கூட்டணியிலிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமை தேர்வு செய்தது. அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் ஒருமித்த வேட்பாளருக்கே எங்களது ஆதரவு என்று இடது சாரிகள் அறிவித்துள்ளது.

பிராணாப்பிற்கு ஏற்ற போட்டியாளரை தேர்வு செய்வதில் பா.ஜனதா மும்முரம் காட்டி வருகிறது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி அப்துல் கலாமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'ஜனாதிபதி தேர்தலில் தாங்கள் போட்டியிட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

60 சதவீத ஆதரவு இருந்தால் மட்டுமே போட்டியிடுவேன் என்று முன்னதாக அறிவித்திருந்தார் அப்துல் கலாம். பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு அப்துல் கலாமிற்கு இருப்பதால் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அப்துல் கலாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். மேலும், அவர் கூறும்போது, இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனவும், தன் மீது மம்தா பானர்ஜி வைத்த நம்பிக்கைக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

தம்மீது மக்கள் செலுத்தி அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தான் போட்டியிடுவதால் ஏற்படும் பிரச்சினையை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவரை போட்டியிட வைக்க பா.ஜனதா, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்