சோனியாவின் கனவு திட்டமான உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேறியது!

செவ்வாய், 3 செப்டம்பர் 2013 (12:27 IST)
FILE
எதிர்க்கட்சிகள் தெரிவித்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் உணவுப் பாதுகாப்பு மசோதா நேற்று இரவு நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் உணவுப் பாதுகாப்பு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின்போது, பல்வேறு கட்சிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்ட திருத்தங்கள், நிராகரிக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார்.

அதன் பின்னர், மசோதா குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தி‌ய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இது சட்டரீதியிலான உரிமையாகும். இதில் உள்ள குறைகள் களையப்படும். இது முழு நிறைவானது அல்ல. மசோதாவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எப்போது அமல்படுத்துவது என முடிவு செய்யப்படவில்லை என்றார்.

உணவுப் பாதுகாப்பு மசோதாவை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அரை மனதுடன் நிறைவேற்றியிருப்பதாக பா.ஜனதா விமர்சித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், உணவுப் பாதுகாப்பு மசோதாவில் உள்ள குறைகள் சரி செய்யப்படும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்