சி.பி.ஐ.யை காங்கிரஸ் தவறாக பயன்படுத்துகிறது - பாஜக குற்றச்சாற்று

திங்கள், 10 பிப்ரவரி 2014 (11:56 IST)
சி.பி.ஐ. விசாரணை அமைப்பை காங்கிரஸ் தவறாக பயன்படுத்துவதாக பாரதீய ஜனதா குற்றம்சாற்றியுள்ளது.
FILE

குஜராத்தில் நடந்த இஷ்ரத் ஜகான் போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் அமைச்சர் அமித் ஷாவின் பெயர் சேர்க்கப்படவில்லை.

இதுபற்றி கருத்து தெரிவித்த சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா, இந்த வழக்கில் அமித் ஷாவை சிக்க வைத்து அவருடைய பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்த்து இருந்தால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகிழ்ச்சி அடைந்து இருக்கும் என்று கூறியதாக டெல்லி பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் ரஞ்சித் சின்கா அப்படி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று சி.பி.ஐ. சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இதுபற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி தனது வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது:-

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளாக சி.பி.ஐ. அமைப்பை சாதுர்யத்துடன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. சி.பி.ஐ. அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. காங்கிரஸ் கட்சி சி.பி.ஐ.யை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தவறாக பயன்படுத்துகிறது.

முன்பு நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்த போதும் அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக ஏராளமான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடைகள், பேருந்து நிறுத்தங்களில் நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் மீதெல்லாம் வழக்கு பதிவு செய்தார்கள். அதன் காரணமாகத்தான் பின்னர் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அரசு தூக்கி எறியப்பட்டது.

தங்களுக்கு சாதகமாக வளைந்து கொடுப்பவர்களைத்தான் சி.பி.ஐ. இயக்குனராக நியமிக்கிறார்கள். பதவிக்காலம் முடிந்து பிறகு வேறு ஏதாவது பதவிகள் அளிப்பதாகவும் அவர்களுக்கு உறுதி அளிக்கிறார்கள். அதை எதிர்பார்த்து அந்த பதவிக்கு வருபவர்களும் நடந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அருண் ஜெட்லி எழுதி இருக்கிறார்.
FILE

ஆனால் அவரது இந்த குற்றச்சாற்றை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி மறுத்துள்ளார். சி.பி.ஐ. சுதந்திரமான விசாரணை அமைப்பு என்றும், அதன் பணிகளில் அரசு குறுக்கிடுவது இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்