சி.ஏ.ஜி. மீது காங். தாக்கு: ஜனாதிபதி தலையிட பா.ஜ. வலியுறுத்தல்

புதன், 12 செப்டம்பர் 2012 (15:56 IST)
நிலக்கரி ஊழலை முன்வைத்த மத்திய கணக்குத் தணிக்கைக் குழு மீது காங்கிரஸ் அரசு கடுமையாக விமர்சனம் செய்வது தவறு எனவே இது குறித்து ஜனாதிபதி தலையிடவேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்றத் தலைவர் எல்.கே. அத்வானி, பாரதீய ஜனதா மக்களவை தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், பாரதீய ஜனதா மாநிலங்களவை தலைவர் அருண் ஜெட்லி, பாராளுமன்ற பொது கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இன்று மதியம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து நடவடிக்கை கோரும் தங்களது தீர்மானத்தை அளித்தனர்.

பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸின் எம்.பி.க்கள், அமைச்சர்கள் அனைவரும் மத்திய தணிக்கைத் துறை பற்றி அவதூறான கருத்துகளை பாராளுமன்றத்திலும் பொது இடத்திலும் பரப்பி வருகிறார்கள்.

இதன்மூலம் பிரதமர் மன்மோகன் சிங் தனது கட்சியினரை ஊழல் செய்வதற்குத் தூண்டி வருகிறார்.

இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று எல்.கே. அத்வானி, ஜனாதிபதியைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தபின் நிருபர்களிடம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்