சிறந்த நிர்வாகம் - பிரதமர் வலியுறுத்தல்!

செவ்வாய், 1 ஜூலை 2008 (17:01 IST)
வர்த்தக‌ம் மற்றும் தொழில் நிறுவனங்களின் நிர்வாகம் சிறந்த முறையில் இல்லாவிட்டால், உலகளாவிய அங்கீகாரத்தை பெற முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்தார்.

புது டெல்லியில் இன்‌ஸ்டியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இந்தியாவின் (இந்திய கணக்காளர் பயிற்சி நிறுவனம்) வைர விழா நிகழ்ச்சியில், பிரதமர் மன்மோகன் சிங் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் இந்தியாவின் தொழில் வர்த்தக நிறுவனங்கள் பொதுமக்களின் கவனத்தை தேவையான அளவிற்கு பெறவில்லை என்பது கவலையளிக்க கூடியதாக இருக்கிறது. இவை சிறந்த நிர்வாகத்திறன் உள்ளவை என்று அங்கிகாரம் பெறவில்லையெனில் உலக அளவில் போட்டியிட முடியாது.

புதிய சூழ்நிலையில் சார்ட்டர்ட் அக்கவுண்டென்டுகள், தவறுகள் நடைபெறாமல் கண்காணிக்க கூடியவர்களாக இருக்கின்றனர். உலக அளவிலான முதலீட்டு சந்தை, பொருளாதார விழிப்புணர்ச்சி அதிகரித்து வருவது. துல்லியமான அதேநேரத்தில் வேகமாக நிதிநிலை அறிக்கைகளை தயாரித்து வழங்குவது சவாலாக உள்ளது என்று மன்மோகன் சிங் கூறினார்.

பொதுமக்கள் மத்தியில் நிறுவனங்களின் நிர்வாகம் சிறந்த முறையில் உள்ளதா என்பது பற்றிய கவனம் தேவையான அளவு இல்லை என்று கூறிய பிரதமர், அரசு அனுமதியும், பாதுகாப்பும் இருந்த சூழ்நிலையில் சிலர் மட்டுமே நிர்வாகம் சிறந்த முறையில் இருக்கின்றதா என்பதை பற்றி கவலைப்பட்டார்கள்.
இது மாதிரியான நிலை நீண்ட நாள் இருக்காது. தற்போது பங்குகளை வாங்கியவர்கள் கேள்விகளை எழுப்ப துவங்கிவிட்டனர்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள், நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளவர்கள், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பங்குச் சந்தை சரியான வழியில் இயங்கும் வகையில், தரமான நிதி நிலை பற்றிய தகவல்களை உங்களிடம் (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) எதிர்பார்க்கின்றனர் என்று மன்மோகன் சிங் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்