சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது: அன்சாரி நாளை வழங்குகிறார்

வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (18:56 IST)
கடந்த ஆண்டின் சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகளை துணை குடியரசுத் தலைவர் அன்சாரி நாளை வழங்குகிறார்.

நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், தத்துவ ஞானியும், மிகச்சிறந்த கல்வியாளருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு அரசு ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கி கவுரவிக்கிறது.

இந்த ஆண்டு ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை டெல்லியில் நடைபெறும் விழாவில் 300 ஆசிரியர்களுக்கு, துணை குடியரசுத் தலைவர் அன்சாரி இந்த விருதுகளை வழங்குகிறார்.

மாநில அரசுகள் பரிந்துரைத்த ஆரம்ப, மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், சி.பி.எஸ்.சி. பரிந்துரைத்த ஆசிரியர்கள், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில், மத்திய திபெத்திய பள்ளி நிர்வாகம், கேந்திரய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் சைனிக் பள்ளிகள் பரிந்துரைத்த ஆசிரியர்கள் போன்றோர் இந்த விருதுகளை பெறுகின்றனர். இந்த விருது, வெள்ளிப்பதக்கமும், ரூ,25 ஆயிரம் ரொக்கப் பணமும் கொண்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்