சஞ்சய் தத் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

வெள்ளி, 22 ஜூலை 2011 (16:08 IST)
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2012 ஜூன் வரை படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் பி.எஸ்.செளஹான் ஆகியோர் கொண்ட அமர்வு,அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி வரை வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்தது.

அதே சமயம் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் ஒரு வாரத்துக்குள் தனது பாஸ்போர்ட்டை அவர் உரிய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக சஞ்சய் தத் குற்றவாளி என மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இந்த வழக்கில் 6 ஆண்டுகள் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்த அவர், 2007 ஆம் ஆண்டில் பிணையில் வெளியே வந்தார்.

அப்போதிலிருந்து வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் உச்சநீதிமன்றத்திடம் அனுமதி பெற்று சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்