குடியரசுத் தலைவர் : ஐ.மு. கூட்டணி வேட்பாளருக்கு மாயாவதி ஆதரவு!

Webdunia

செவ்வாய், 12 ஜூன் 2007 (16:14 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய கணிசமான வாக்குகளை தன்னகத்தே வைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்துள்ளது!

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசிய உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பது குறித்து அக்கூட்டணியுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐ.மு. கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படப் போவது யார் என்று கேட்டதற்கு, அதனை சோனியா காந்தி அறிவிப்பார் என்று மாயாவதி பதிலளித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து சோனியா காந்தியுடன் நேற்று இரவும், இன்று காலையும் விரிவாக விவாதித்த பின்னர் இந்த உடன்பாடு ஏற்பட்டதாக மாயாவதி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்