குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கு : பா.ஜ.க தர்ணா!

Webdunia

சனி, 3 நவம்பர் 2007 (20:15 IST)
கர்நாடக மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கி, பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியை ஆட்சி அழைக்க கோரி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவுடன், பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரி வருகிறது. இந்த இரண்டு கட்சியைச் சேர்ந்த 129 சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர் (மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 224 ).

கர்நாடக ஆளுநர் ராமேஷ்வர் தாகூர், கர்நாடகாவில் நிலவும் அரசியல் நிலைமை குறித்து நேற்று முன்தினம் குடியரசுக்கு அறிக்கையை அனுப்பியுள்ளார். இதன் அடிப்படையில் மத்திய அமைச்சரவை கூடி விவாதித்து, கர்நாடக மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும்.

நேற்று கூடிய மத்திய அமைச்சரவையில் இது குறித்து விவாதிக்க படவில்லை என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரியரன்ஞன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.

மூன்று தினங்களுக்கு முன் நடந்த மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகார கமிட்டி கூட்டத்திலும கர்நாடகா நிலவரம் பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆட்சி அமைக்க உரிமைகோரி காலவரையற்ற தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த தர்ணாவில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இநத தர்ணா மகாத்மா காந்தி திருவுருவச் சிலை முன்பு தொடங்கியது. இதற்கு மூத்த பா.ஜ.க. தலைவர் எம். வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார்.

தர்ணா நடபெறும் இடத்தில் குழுமியிருந்த தொண்டர்கள் மத்தியில் வெங்கையா நாயுடு பேசும் போது, தங்கள் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரி ஏழு நாட்கள் ஆன பிறகும், ஆளுநரிடமிருந்து ஆட்சி அமைப்பதற்கான அழைப்பு வரவில்லை. காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைப்பதை தடுக்க, சதி செய்கிறது. காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிறது. ஆளுநர் மாளிகையை தவறாக பயன் படுத்துகிறது. ஆளுநர் மாளிகையை காங்கிரஸ் கட்சி அலுவலமாக மாற்ற முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், ஆளுநர் பாரதிய ஜனதா கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் வரை தர்ணா தொடரும். அத்துடன் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். தேவைப்பட்டால் நாடு முழுவதும் போராட்டம் விஸ்தரிக்கப்படும் என்று நாயுடு கூறினார்.

முன்னதாக மேலிடத்தின் செய்தியுடன் வந்த வெங்கையா நாயுடு, பா.ஜ கட்சியைச் சேர்ந்த மாநிலத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்டப்பேரவை உறுப்பினர்களால் முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பி.எஸ். எடியூரப்பா, மாநில கட்சித் தலைவர் டி.வி.சதானந்த கெளடா உட்பட மூத்த தலைவர்களுடன் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் விவாதிக்கபட்ட விபரங்களை தெரிவிக்க நாயுடு மறுத்து விட்டார்.
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் தேவ கெளடா விதித்துள்ள 12 நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு, நாயுடு இந்த விஷயத்தை கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் பார்த்துக் கொள்வார் என்று பதிலளித்தார்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை. குடியரசுத் தலைவர் முன்பு நிறுத்தும் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று நடந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்காத மதச்சார்பற்ற ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் மாளிகையில் ப்.ஜ நடத்தவுள்ள அணிவகுப்பில் பங்கேற்பார்களா என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்