கிரிக்கெட் மூலம் ஈழத் தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க முற்படாதது ஏன்? பால் தாக்ரே வினா

வெள்ளி, 1 ஏப்ரல் 2011 (21:06 IST)
பாகிஸ்தானுடனான பிரச்சனைகளை கிரிக்கெட் இராஜதந்திரத்தின் மூலம் தீர்க்க முயற்சிக்கும் மத்திய அரசு, அதே பாணியில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண முற்படாதது ஏன் என்று சிவ் சேனா தலைவர் பால் தாக்ரே வினா எழுப்பியுள்ளார்.

சிவ் சேனா கட்சி இதழான சாம்னாவில் இவ்வாறு எழுதியுள்ளார் பால் தாக்ரே. "இலங்கைத் தமிழர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். பாகிஸ்தானுடன் நட்பை மேம்படுத்த கிரிக்கெட் இராஜதந்திர முறையை கடைபிடிக்கிறோம். இதே வழியில் இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் தீர்க்க ஏன் இந்திய அரசு முயற்சிக்கவில்லை என்று கேட்டுள்ள பால் தாக்ரே, பாகிஸ்தான் பிரதமருக்கு விடுக்கப்பட்ட அழைப்பைப்போல் சிறிலங்க அதிபருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா" என்று வினா எழுப்பியுள்ளார்.

கிரிக்கெட் போட்டியை காண வந்த பாகிஸ்தான் பிரதமருடன் இந்தியப் பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தையில் எத்தனை பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டது என்றும் பால் தாக்ரே வினா எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்