காங்கிரஸார் மீது மாவோயிஸ்ட் துப்பாக்கிச்சூடு -27 பேர் பலி!

ஞாயிறு, 26 மே 2013 (11:57 IST)
FILE
சத்தீஸ்கரில் காங்கிரஸ் பேரணியில் புகுந்து மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பையும், கண்டனக்குரல்களையும் எழுப்பியுள்ளது. அந்த இடமே ரத்தக்களறியான நிலையில் பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கு முதல்-மந்திரி ராமன்சிங் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் பாரதீய ஜனதாவும், காங்கிரசும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

காங்கிரஸ் சார்பில் மாவோயிஸ்டுகளை எதிர்த்து மாநிலம் முழுவதும் பரிவர்த்தன் யாத்திரை நடத்தி வருகிறார்கள். நேற்று ஜக்தால்பூர் மாவட்டத்தில் கீடம் காட்டி என்ற வனப் பகுதியை அடுத்த தர்பா காட்டி கிராமத்தில் மாலை 5.30 மணி அளவில் காங்கிரசார் பேரணி நடத்தினார்கள்.

இதில் மாநில காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கார்களில் அணிவகுத்துச் சென்றனர். அப்போது ஆயுதம் தாங்கிய 100-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். நிலத்தில் புதைக்கப்பட்டு இருந்த கண்ணி வெடிகளையும் வெடிக்கச் செய்தனர்.

உடனே பாதுகாப்புக்கு வந்த ஆயுதப்படை போலீசார் மாவோயிஸ்டுகளை எதிர்த்து சுட்டனர். ஆனால் தோட்டாக்கள் தீர்ந்ததால் மாவோயிஸ்டுகள் தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள். கண் மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாவோயிஸ்டுகள் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வந்தவருமான மகேந்திர கர்மா உடலை தோட்டாக்கள் சல்லடையாக துளைத்தன.

இதில் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. கோபால் மாதவன், முன்னாள் எம்.எல்.ஏ. உதயா முதலியார் உள்பட 17 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள்.

முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வி.சி.சுக்வா உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த நேரத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேல், அவரது மகன் தினேஷ் பட்டேல் ஆகியோரை மாவோயிஸ்டுகள் வனப்பகுதிக்குள் கடத்திச் சென்றனர்.

பேரணிக்கு வந்த காங்கிரஸ் தொண்டர்கள் வனப்பகுதிக்குள் புகுந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அவர்களையும் மாவோயிஸ்டுகள் பிடித்து வைத்துக் கொண்டனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அருகில் முகாமிட்டு இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால் இருவரையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

நந்தகுமார் பட்டேலும் மகன் தினேஷ் பட்டேலும் ஜகதால்பூர் அருகே உள்ள தர்பா காதி வனப்பகுதியில் பிணமாகக் கிடந்தனர். அவர்களை கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள் வழியிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பிணத்தை வனப்பகுதியில் வீசிச்சென்று விட்டனர்.

ரிசர்வ் போலீஸ் படை தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 10 உடல்கள் வனப்பகுதியில் மீட்கப்பட்டன. இதனால் இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முதல்-மந்திரி ராமன்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்