கழிவுநீர் தொட்டி ஊழல்: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் சிக்கினர்

செவ்வாய், 17 பிப்ரவரி 2009 (13:42 IST)
பஞ்சாப் மாநிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் தொட்டி ஊழலில் அம்மாநிலத்தின் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 11 அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கண்காணிப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் விதிகளை மீறி தரம் குறைந்த பிளாஸ்டிக் தொட்டிகளை கழிவுநீர் சேகரிப்புக்காக அனுமதித்ததன் மூலம், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் அரசுக்கு 7 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தரம் குறைந்த பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டிருந்ததால், கடந்த 2004ஆம் ஆண்டில் 158 கிராமங்களில் அமைக்கப்பட்ட கழிவுநீர்த் தொட்டிகளில் 70 விழுக்காடு அளவுக்கு உடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துவக்கத்தில் அந்த கிராமங்களில் கழிவுநீர்த் தொட்டி அனுமதிக்க முடிவு செய்யப்பட்ட போது சுவீடன் நாட்டுடன் இணைந்து கான்கிரீட் கழிவுநீர்த் தொட்டிகளை அமைக்க பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், பின்னர் கான்கிரீட் தொட்டிகளுக்குப் பதில், தரம் குறைந்த பிளாஸ்டிக் தொட்டிகள் அமைக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜே.ஆர். கவுன்டால், சண்டிகர் இந்திய உணவுக் கழக மண்டல மேலாளர் சர்வ்ஜித் சிங் ஆகிய இருவர் தவிர மேலும் 11 பேர் இந்த வழக்கில் சிக்கியிருப்பதாக அவர்கள் கூறினர்.

தரம் குறைவான பிளாஸ்டிக் கழிவுநீர் தொட்டிகளை வழங்கிய 3 நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த ஊழல் நடைபெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்