கர்நாடக சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டர் பதவி விலகல்

திங்கள், 16 நவம்பர் 2009 (18:57 IST)
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் சிக்கலுக்கு ஏற்பட்ட சுமூக உடன்பாட்டின்படி, சட்டப்பேரவைத் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு ஏதுவாக தமது பேரவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமைக்கு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்டி சகோதரர்கள் அண்மையில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் நடைபெற்ற பேச்சில் முதல்வருக்கும், ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

அதன்படி பேரவைத் தலைவர் ஷெட்டரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று அப்போது முடிவு செய்யப்பட்டது.

ஷெட்டர் தமது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியுடன் சென்று துணை சபாநாயகர் கே.ஜி. போபையாவிடம் அளித்தார்.

கடந்த மே மாதத்தில் சபாநாயகர் பதவிக்கு ஷெட்டர் அறிவிக்கப்பட்டதும், தமக்கு அப்பதவியில் விருப்பமில்லை என்று ஷெட்டர் அப்போதே தெரிவித்தார். மேலும் ஷெட்டரின் அரசியல் எதிர்காலத்தை முடக்கும் நோக்கிலேயே எடியூரப்பா, ஷெட்டரை சபாநாயகராக நியமித்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

கர்நாடக அமைச்சராக ஷெட்டர் செவ்வாய்க்கிழமையன்று பதவியேற்பார் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்