ஓஸ்மானியா பல்கலையில் மாணவர்கள் போராட்டம்: ஹைதரபாத்தில் பதற்றம்

புதன், 9 டிசம்பர் 2009 (11:12 IST)
தனித் தெலுங்கானா மாநிலம் கோரி ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் துவக்கியதால் ஹைதராபாத்தில் பதற்றம் நிலவுகிறது.

அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக மாலை 6 மணி வரை ஹைதராபாத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தெலுங்கானா ரஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் இன்று 11வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தனி தெலுங்கானா கோரி ஓஸ்மானியா பல்கலைக்கழக வளாகம் முன் இன்று காலை மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். எனினும் மாணவர்கள் அங்கிருந்து நகர மறுப்பதால் பதற்றம் நிலவுகிறது.

ஹைதராபாத்தில் கலவரம், வன்முறை ஏற்படாமல் தடுக்க நகரம் முழுவதும் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்