உலக பயங்கரவாதத்தின் மையம் பாக்.- மன்மோகன்

புதன், 1 ஏப்ரல் 2009 (10:49 IST)
உலகில் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களின் மையமாக பாகிஸ்தான் இருந்து வருவதாகவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜி- 20 நாடுகளின் இரண்டாவது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தற்போது லண்டன் சென்றுள்ளார்.

தனது பயணத்திற்கு முன்பாக ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பிரதமர் அளித்த பேட்டியில் பாகிஸ்தானின் செயல்பாடுகளை கடுமையாகக் குறைகூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் '165 பேர் இறக்கக் காரணமான மும்பைத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்- இ- தாய்பா அமைப்பே காரணம். இந்த அமைப்பைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானால் இயலவில்லை அல்லது அதற்கு விருப்பமில்லை என்று கூறலாம்.

இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் களமாக இருக்காது என்று கடந்த காலங்களில் அந்த நாடு வாக்குறுதிகளை அளித்திருந்தாலும், பயங்கரவாதிகளுக்கு எதிராக பயனளிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுக்கவோ, கட்டுப்படுத்தவோ அது தவறிவிட்டது.

உலகில் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களின் மையமாக பாகிஸ்தான் விளங்குகிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்த உண்மையை உலக சமுதாயம் நன்கு பற்றிக் கொள்ள முன்வர வேண்டும்" என்றார்.