உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் 100 நாள் திட்டம் வெளியீடு

வியாழன், 16 ஜூலை 2009 (10:58 IST)
உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் 100 நாள் செயல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 100 நாட்களுக்குள் 350 உணவு பதப்படுத்தும் தொழிற்பிரிவுகளை அமைக்கப்படும் என்றும், ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய பத்திரிகை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முந்தைய ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் தனது தொலைநோக்கு திட்டம் 2015-ன் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே 47 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாக இந்த அமைச்சகம் உதவியிருக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகளில், 2015-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை செய்து முடிக்க இந்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

தொலைநோக்கு திட்டம் 2015-ன் இலக்குகளை அடுத்த 5 ஆண்டுகளில் அடைவதற்கு இன்னும் நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. அந்த வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய 13 முக்கிய துறைகளை இந்த அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

தொழில்நுட்ப பணியாளர்கள், மேலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் என அனைத்து நிலைகளிலும் பயிற்சி பெற்ற பணியாளர்களின் சப்ளையை உறுதி செய்வது இந்த அமைச்சகத்தின் முன்னுரிமைப் பணியாகும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் திறன் பெற்ற தொழிலாளர்களுக்கும், 5 லட்சம் பெண் தொழில் முனைவோருக்கும் பயிற்சி அளிப்பதற்கான செயல்திட்டத்தை இந்த அமைச்சகம் தயாரிக்கும்.

அடுத்த 100 நாட்களில் முதல்கட்ட தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைப்பு மற்றும் மேலாண்மை நிறுவனத்தையும் (என்.ஐ.எப்.டி.இ.எம்) இந்த அமைச்சகம் தொடங்கும். இந்தத் துறையில் வேகமான முதலீடு வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மனிதவள ஆற்றலை உருவாக்க பயிற்சி அளிப்பதில் உயர் பயிற்சி நிறுவனமாக என்ஐஎப்டிஇஎம் திகழும்.

தஞ்சாவூரில் உள்ள ஐஐசிபிடி-ல் இன்னும் 100 நாட்களில் உணவு பதப்படுத்தும் செயற்கை முறையில் முட்டைகளை அடைக்காத்து குஞ்சுபொறிக்கும் மாபெரும் மையத்தையும் அமைச்சகம் தொடங்கவுள்ளது.

இன்னும் 100 நாட்களில் இரண்டு ஒருங்கிணைந்த சங்கிலித் தொடர் குளிர்பதன சேமிப்பு திட்டங்களையும், நாட்டின் முதலாவது மாபெரும் உணவு பூங்காவில் முதல் பதப்படுத்தும் தொழில் பிரிவையும் அமைச்சகம் தொடங்கவுள்ளது.

இத்துறையில் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் தகவல்களை பரப்புவதற்கும் கொண்டு சேர்ப்பதற்கும் புதிய இணையதளம் ஒன்றையும் இதழ் ஒன்றையும் அமைச்சகம் தொடங்கவுள்ளது.

'இந்தியாவை மாற்றுதல், 100 நாட்களில் 100 வழிமுறைகள்'என்ற கையேடு அடுத்த 5 ஆண்டுகளில் அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ள மேலும் பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்