இந்திய மாணவர்கள் தாக்குதல்: மத்திய அரசுக்கு உத்தரவு

திங்கள், 22 ஜூன் 2009 (13:14 IST)
ஆஸ்திரேலியாவிலும், கனடாவிலும் நிறவெறித் தாக்குதலுக்கு ஆளாகும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை வரும் வெள்ளிக்கிழமைக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, அசோக் குமார் கங்குலி ஆகியோரைக் கொண்ட விடுமுறைக்கால டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களின் வாழ்வைப் பாதுகாக்க மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்று கூறி பொதுநல மனு ஒன்றை வழக்கறிஞர் டி.கே. கார்க் தாக்கல் செய்திருந்தார்.

வெளிநாடுகளில் இந்தியர்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்