ஆஷிஷ் நந்தியைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை

சனி, 2 பிப்ரவரி 2013 (15:08 IST)
FILE
நாட்டில் நடைபெறும் ஊழல்களுக்குக் காரணம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பைச் சார்ந்தவர்களே என்று பேசி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதியப்பட்ட ஆஷிஷ் நந்தியைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் தான் அதிகம் ஊழல் செய்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர் ஆஷிஷ் நந்தி பேசியிருந்தார். ஆஷிஷ் நந்தி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெய்ப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அஷிஷ் நந்தி மனு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, விக்ரமஜித் சென் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஷிஷ் நந்தி சார்பில் ஆஜரான வக்கீல் அமன் லேக்கி வாதாடுகையில், ஜெய்ப்பூர் பேச்சுக்காக ஆஷிஷ் நந்தி மீது பல இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேவையின்றி பரபரப்பு ஏற்படுத்தப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மக்களை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பேசவில்லை. எனவே, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், பரபரப்பை உருவாக்கியது ஆஷிஷ் நந்தி தான். வழக்குப் போடுபவர்கள் அல்ல. இஷ்டப்படி பேச அவருக்கு யாரும் லைசென்ஸ் தரவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு, ராஜஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். மேலும் இந்த வழக்கில் ஆஷிஷ் நந்தியை கைது செய்ய தடை விதிக்கிறோம் என்று கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்