ஆர்காம் நிறுவனத்திற்கு சலுகை காட்டவில்லை: கபில் சிபல்

வெள்ளி, 8 ஜூலை 2011 (17:58 IST)
தனது சேவையை முடக்கியதற்காக ஆர்காம் (ரிலையன்ஸ்) நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை குறைத்து சலுகை காட்டியதாக தொடரப்பட்ட பொது நல மனு, உள்நோக்கம் கொண்டது, பெருமையைக் குறைப்பது என்று கூறியுள்ள அமைச்சர் கபில் சிபல், ஒப்பந்த விதிகளின் படியே அபாரதத்தை விதித்ததாக கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், தனியார் அலைபேசி நிறுவனத்திற்கும், உரிமை பெறுவதற்கான நிதியத்தின் விதிமுறைகளின் படியாத நடைமுறைப்படியும் சேவை துண்டித்ததற்காக விதிப்படியே ரூ.5 கோடி அபாரதம் விதித்ததாக கூறியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற அமர்வு முன்னர் பொது நல வழக்கு மையத்தின் சார்பில் வாதிட்டுவரும் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் நேற்று தாக்கல் செய்த மனுவில், தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகளின் பரிந்துரையை நிராகரித்துவிட்டு, ஆர்காம் மீது ரூ.650 கோடிக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரூ.5 கோடியாக அமைச்சர் கபில் சிபல் குறைத்துள்ளார் என்றும், அது தொடர்பாக ம.பு.க. விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து இன்று செய்தியாளர்களிடம் பேசியபோதே கபில் சிபல் இவ்வாறு கூறியுள்ளார்.
நவம்பர் 2010, டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் ஆர்காம் தனது சேவையை நிறுத்தியது, அதற்காக விளக்கம் கேட்டு அந்நிறுவனத்திற்கு அரசு தாக்கீது அனுப்பியது. உரிய விளக்கம் தரவில்லையெனில் ரூ.50 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று கூறியிருந்தது.

ரூ.50 கோடி அபராதம் என்று கூறப்பட்டது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கவே. அது அவர்களுக்கு கவலையைத் தந்தது. அந்த தாக்கீதைத் தொடர்ந்து அவர்கள் பிப்ரவரி 16ஆம் தேதி சேவையைத் தொடங்கிவிட்டனர். இடைப்பட்ட காலத்திற்கு மட்டும் அபராதமாக ரூ.5.5 கோடியை கட்டிவிட்டனர் என்று கபில் சிபல் கூறியுள்ளார்.

இந்த அபராதம் 7 முதல் 45 நாட்களுக்கு உரியதாகும் என்று கபில் விளக்கமளித்துள்ளார். இதையெல்லாம் முழுமையாக அறியாமல் வழக்கு தொடர்வது உள்நோக்கத்துடன் கூடியது, பெருமையை குலைப்பது என்று அவர் காட்டமாக பிரசாந்த் பூஷணை பெயர் குறிப்பிடாமல் விளாசினார். தனித்த பகையை தீர்த்துக்கொள்ளவதற்கு பொது நல வழக்கு கருவியாகாது என்றும் சிபல் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்