ஆருஷி கொலை வழக்கு: மறு விசாரணைக்கு உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு

திங்கள், 3 ஜனவரி 2011 (17:52 IST)
ஆருஷி கொலை வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உ‌த்தர‌பிரதேச‌ம் மா‌நில‌ம் நொ‌ய்டா‌வி‌ல், கடந்த 2008 ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் 16 ஆ‌ம் தே‌தி ‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்த ஆரு‌ஷி எ‌ன்ற 16 வயது பெ‌ண் கழு‌‌த்து அறுக்கப்ப‌ட்டு ம‌ர்மமான முறை‌யி‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌க்கொலைக்கு காரணமானவராக சந்தேகிக்கபட்ட வீ‌ட்டு வேலை‌க்கார‌ர் ஹேம‌ந்து‌ம் ஆருஷி கொலையுண்ட மறுதினம் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வு கழகமான சிபிஐ, ஆரு‌ஷி கொலை வழ‌க்‌கி‌ல் கு‌ற்றவா‌ளிகளை க‌ண்டு‌பிடி‌க்க இயலவில்லை என்று கூறி, இவ்வழக்கை மூடுமாறு கா‌ஸியாபா‌த் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் கட‌ந்த மாத‌ம் 29 ஆ‌ம் தே‌தி அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

சிபிஐ இவ்வாறு கண்டுபிடிக்க இயலவில்லை என்று கைவிரித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காஸியாபாத் நீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆருஷி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "ஆருஸி வழக்கை துப்பு துலக்காமல், குற்றம் இழைத்தவர்களைக் கண்டுபிடிக்க முயலாமல் வழக்கை மூடப் பார்க்கிறது சிபிஐ. இதை அனுமதிக்கக் கூடாது. மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால் அந்த மனுவை விசாரித்த காஸியாபாத் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரீத்தி சிங், அக்கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

அதே சமயம் இவ்வழக்கை மூடுவதில் அவசரம் காட்டுவது ஏன் என்று சிபிஐ-க்கு அவர் கேள்வி விடுத்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்