ஆந்திராவில் ரயில் தீ விபத்தில் 26 பேர் பலி

சனி, 28 டிசம்பர் 2013 (18:39 IST)
பெங்களூரிலிருந்து மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நந்தெத் நகருக்கு சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
FILE


கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து மராட்டிய மாநிலம் நந்தெத் நகருக்கு நேற்றிரவு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த ரயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் தர்மா வரம்- பென்னுகொண்டா இடையே கொத்தசேரவு ரயில் நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

திடீரென இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட ஏ.சி. பெட்டியில் தீ பிடித்தது. பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் தீ பிடித்தது யாருக்கும் தெரியவில்லை. ரயில் ஓடிய வேகத்தில் காற்றின் தாக்கம் காரணமாக தீ மளமளவென பரவியது. 3.15 மணிக்கு அந்த ஏசி. பெட்டிக்குள் புகை பரவி மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகே ரயிலில் தீ பிடித்து இருப்பது பயணிகளுக்கு தெரிய வந்தது.

அந்த ஏ.சி. பெட்டியில் மொத்தம் 72 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் உயிர் தப்பிக்க உதவி கோரி அலறினார்கள். உயிர் தப்பிக்க எல்லா பயணிகளும் வாசல் பகுதிக்கு முண்டியடித்து சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. சில பயணிகள் பெட்டியில் இருந்து வெளியில் குதித்தனர். சுமார் 50 பயணிகள் கடும் புகை மூட்டம், தீயில் சிக்கிக் கொண்டனர். இதற்கிடையே ரயில் தீ பிடித்த தகவல் மற்ற பெட்டிகளுக்கும் பரவியது. உடனடியாக அவர்கள் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்கள்.

எல்லா பயணிகளும் பயந்தபடியே கீழே இறங்கினார்கள். ஏ.சி. பெட்டியில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்தன. அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஏ.சி. பெட்டியில் பிடித்த தீயை அணைத்தனர். இதற்கிடையே பெங்களூரில் இருந்து மீட்புக் குழுவினரும் மருத்துவக் குழுவினரும் விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக மீட்புப் பணியை தொடங்கினார்கள். அப்போது ஏ.சி. பெட்டிக்குள் 23 பயணிகள் தீயில் கருகி பலியாகி கிடப்பது தெரிந்தது. அவர்களில் 2 பேர் குழந்தைகள். பலரது உடல் முழுமையாக எரிந்து கரிக்கட்டை போல ஆகிவிட்டது.

23 பேர் பலியான தகவலை அனந்த்பூர் மாவட்ட கலெக்டர் லோகேஸ்குமார் நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார். இதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் பலியாகியுள்ளதால், பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. அதிகாலை இருள், பனி, புகை மூட்டம் காரணமாக மீட்புப் பணிகளை விரைந்து முடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. காலை 9 மணிக்கு மீட்புப் பணி முடிந்தது. 12 பயணிகள் பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் புட்டப்பர்த்தி மற்றும் தர்மாவரம் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
FILE


தீ பிடித்த ஏ.சி. பெட்டியில் இருந்த சிலரை காணவில்லை. கீழே குதித்தவர்கள் கதி என்ன என்பதும் தெரியவில்லை. எனவே இந்த கோர விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ரெயிலில் தீ பிடித்து 26 பேர் பலியான தகவல் அறிந்ததும் மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே அதிர்ச்சி அடைந்தார். ரயில்வே உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். விபத்து பற்றிய விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே இரண்டடுக்கு ஏ.சி. பெட்டியில் இருந்த மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டு இருந்ததாகவும், அந்த கோளாறால்தான் தீ பிடித்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் சென்று தீ பிடித்த ரெயில் பெட்டியை பார்வையிட்டனர். தீ பிடித்த பி-1 ஏ.சி. பெட்டி முழுமையாக எரிந்து நாசமாகிப்போனது. அந்த பெட்டி கழற்றி விடப்பட்டு மற்ற பெட்டிகள் பிரிக்கப்பட்டன. தீ விபத்து காரணமாக நடுவழியில் தவித்த பயணிகள் அனைவரும் புட்டபர்த்திக்கு அழைத்து செல்லப்பட்டு பிறகு அவர்களது ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து மற்றும் பயணிகள் பற்றி தகவல் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் பெங்களூர் ரயில் அலுவலகத்தை 080- 22354108, 22259271, 22156554 ஆகிய எண்களில் தொடர்பு கொள் ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் கார்கே அறிவித்துள்ளார். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.