ஆதர்ஷ் நில ஊழல்: சுஷில்குமார் ஷிண்டே புது விளக்கம்

வியாழன், 26 மே 2011 (15:28 IST)
மகாராஷ்டிராவில் ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்துக்கான நிலம் கார்கில் போர் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டதல்ல என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், மத்திய மின்சாரத்துறை அமைச்சருமான சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இருநபர் குழுவில், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள சாட்சிப் பத்திரத்தில் கூறியிருப்பதாவது:

ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ள நிலம் மகாராஷ்டிர அரசுக்கு சொந்தமானது. அது இராணுவத்தினருக்கோ அல்லது கார்கில் போர் வீரர்களுக்கோ ஒதுக்கப்பட்டது அல்ல.அனைத்து பத்திரங்களையும் சரிபார்த்த பின்னரே, அந்த நிலம் முறைப்படி ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்துக்கு ஒதுக்கப்பட்டது.

1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்ட அரசுத் தீர்மானத்தின் நெறிமுறைகளை பின்பற்றியே அந்த சங்கத்துக்கு நிலம் வழங்கப்பட்டது.இந்த நெறிமுறைகளில் போர் வீரர்களுக்கு ஒதுக்கீடு தருவது குறித்து எதுவுமில்லை. எனவே, இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் முறைகேடு நடைபெறவில்லை.

இவ்வாறு சுஷில்குமார் ஷிண்டே தனது சாட்சிப் பத்திரத்தில் விளக்கம் அளித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்