அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை: மன்மோகன் சிங்

சனி, 8 ஜனவரி 2011 (19:04 IST)
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிக்க வகை செய்யும் புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் `9 ஆவது பிரவாசி பாரதிய திவாஸ்' மூன்று நாள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது.

இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்து, மன்மோகன் சிங் பேசியதாவது:

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கும் சட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.அச்சட்டம் விரைவில் கொண்டுவரப்படும். இந்திய தேர்தலில் உங்களுடைய பங்களிப்பு வரவேற்கத்தக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. சர்வதேச அளவில் உள்ள உங்களுடைய சுவாசத்தை நம்முடைய அரசியலில் கொண்டு வரலாம்.

அயல்நாடுகளில் வாழும் இந்திய குடிமகன் அட்டை, இந்தியாவை பூர்வீகமாக கொண்டவருக்கான அட்டை ஆகிய இரண்டையும் ஒன்றாக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த அட்டையை வைத்துள்ள அயல்நாடு வாழ் இந்தியர்கள் `விசா' இல்லாமல் இலகுவாக இந்தியா வந்து செல்லவும், வர்த்தகம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் பங்கெடுக்கவும் வசதி செய்து தரப்படும்.

இத்தகைய திட்டங்களை அமல்படுத்தும்போது உருவாகும் சில நடைமுறை சிக்கல்கள் முற்றிலும் நீக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்