காஷ்மீரில் மோதல்: யாஸி‌ன் மாலிக் காயம்!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (19:33 IST)
காஷ்மீரில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசி‌ன் மாலிக் உட்பட பலர் காயமடைந்தனர்.

தெற்கு காஷ்மீரில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று பிற்பகல் நடைபெற்ற தொழுகைக்குப் பிறகு, அங்கிருந்தவர்கள் சுயாட்சி கோரி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அவர்களை கலைந்து போகும்படி பாதுகாப்புப் படையினர் கேட்டுக் கொண்டனர்.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதை ஏற்காமல், தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, கூட்டத்தை கலைக்கச் செய்ய பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.

இதையடுத்து இரு தரப்பினர் இடையே மோதல் வலுத்தது. அப்போது காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசிம் மாலிக் உட்பட சுமார் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தைத் தொடர்ந்து தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் நகர் உட்பட சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த மற்றொரு ஆர்ப்பாட்டத்திலும் வன்முறை வெடித்ததாகவும், இதில் சுமார் 25 பேர் படுகாயம் அடைந்ததாகவும் யு.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்