ஹைதராபாத் குண்டுவெடிப்பு : மராட்டியத்தில் ஒருவர் கைது!

ஹைதராபாத்தில் சார்மினார் அருகில் உள்ள பழமை வாய்ந்த மெக்கா மஸ்ஜித் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளை அளித்ததாகக் கூறப்படும் ஒருவனை மராட்டிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர்!

மராட்டிய மாநிலம் ஜால்னா நகரில் வசித்து வரும் ஷோயப் ஜோஹிர்தார், மசூதியில் வைக்கப்பட்ட வெடிபொருளை வாங்கித் தருவதற்கு உதவி புரிந்ததாக கைது செய்த மராட்டிய காவல் துறையினர், அவரை ஆந்திர காவல் துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளை ஜோஹிர்தார் பெற்றுத் தந்ததாக மராட்டிய காவல் துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 18 ஆம் தேதி மெக்கா மஸ்ஜித்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தை அடக்க காவல் துறையினர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்