ரூபாயின் பணவீக்கம் 5.22 விழுக்காடாக குறைந்தது!

உணவுப் பொருட்கள், ஜவுளி ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் ரூபாயின் வாங்கும் சக்தி மே 12 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 0.22 விழுக்காடு குறைந்து பணவீக்கம் 5.22 விழுக்காடாக சரிந்துள்ளது!

மே 5 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 5.44 விழுக்காடாக இருந்த ரூபாயின் பணவீக்கம், கடந்த ஆண்டு இதே வாரத்தில் 4.63 விழுக்காடாக இருந்ததென மத்திய அரசின் புள்ளியில் துறை கூறியுள்ளது.

அனைத்து பொருட்களுக்கான மொத்த விலைக் குறியீடு 0.1 விழுக்காடு குறைந்து 211.4 புள்ளிகளாக குறைந்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க உணவுப் பொருள் வரத்தை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று நிதியமச்சர் ப. சிதம்பரம் கூறியதைத் தொடர்ந்து சந்தைக்கு பொருட்கள் வரத்து அதிகரித்ததால் விலைவாசி தொடர்ந்து குறைந்து வருகிறது.

உணவுப் பொருட்களுக்கான விலைக் குறையீடு 0.6 விழுக்காடு குறைந்து 185.7 புள்ளிகளில் இருந்து 184.5 புள்ளிகளாக குறைந்துள்ளது.

தேயிலை 9 விழுக்காடும், மைதா 5 விழுக்காடும், ரவை 3 விழுக்காடும், அரிசித் தவிடு 2 விழுக்காடும், கடலை எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றின் விலை ஒரு விழுக்காடும் குறைந்துள்ளன.

ஜவுளிப் பொருட்களின் விலைக் குறியீடு 0.1 விழுக்காடு குறைந்துள்ளது. காகித மற்றும் காகிதப் பொருட்களின் விலையும் 0.1 விழுக்காடு குறைந்துள்ளது.

ரசாயனப் பொருட்கள் விலைக் குறியீடு 0.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆனால், மெத்தனால் 24 விழுக்காடும், டெரஃப்தாலிக் 8 விழுக்காடும், திரவ குளோரின் 1 விழுக்காடும் குறைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்