ராடியா பேச்சுப்பதிவுகள் ஊழலில் இருந்து திசை திருப்புகின்றன: ரத்தன் டாடா குற்றச்சாற்று

சனி, 27 நவம்பர் 2010 (13:15 IST)
FILE
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சில நிறுவனங்கள் மட்டும் பல அலைக்கற்றைகளை சுருட்டிக் கொண்ட ஊழலை திசை திருப்பவே நீரா ராடியா பேச்சுப்பதிவுகள் பயன்படுத்தப்படுகின்றன என்று டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.

என்.டி.டி.வி. தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள ரத்தன் டாடா, தொழில் நிறுவனங்களுடனும், அரசியல்வாதிகளுடனும், பத்திரிக்கையாளர்கள் சிலருடனும் ராடியா நடத்திய செல்பேசி உரையாடல்களை ஊடங்கங்கள் வெளியிட்டு ஒரு புகைத் திரையை உருவாக்குகின்றன. இதனால் உண்மையான ஊழலில் திருந்து கவனம் திசைதிருப்பப்படுகிறது என்று கூறியுள்ளார்.

“ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது என்ன? அது சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 2 ஜி அலைக்கற்றைகளை முறைகேடாக சுருட்டிக்கொண்ட மிகப் பெரிய ஊழல். ஆனால் ராடியா நடத்திய உரையாடல்களைக் கொண்டு ஒரு புகைத் திரையை ஊடகங்களைக் கொண்டு உருவாக்குகிறார்கள். ஆனால் உண்மையான ஊழல் இத்திரைக்குப் பின்னால் உள்ளது” என்று கூறியுள்ளார்.

இப்பிரச்சனையில் அரசு ஒரு நிலையெடுத்த சரியாக புலனாய்வு செய்து, உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ள ரத்தன் டாடா, “அதிகாரப்பூர்வமற்ற உரையாடல் பதிவுகள் வெள்ளமென ஓடுகின்றன. ஊடகங்கள் பயித்தியம் பிடித்து அதன் பின் ஓடுகின்றன. அதை அடிப்படையாகக் கொண்டு குற்றம் சாற்றுகின்றன, தண்டிக்கின்றன, பண்புக் கொலையில் ஈடுபடுகின்றன. அரசு ஒரு நிலை எடுத்து செயல்பட வேண்டும். தணிக்கையாளரை நியமித்து, தெளிவான புலனாய்வு செய்ய வேண்டும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு யார் மீது வேண்டுமானாலும் யாரும் குற்றம் சாற்றலாம் என்ற நிலை மோசமானது. ஒருவர் நீதிமன்றத்தில் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும்வரை அவர் இந்தியாவின் சட்டங்களின் படி நிரபராதியே” என்று ரத்தன் டாடா கூறியுள்ளார்.

இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரால் அளிக்கப்பட்ட அறிக்கையின் படி, தொலைத் தொடர்புத் துறைக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ஏற்பட்ட ரூ.1.76 இலட்சம் கோடி இழப்பு தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணையின் ஒரு அங்கமாக, டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் உட்பட 9 பெரும் நிறுவனங்களுக்கு விளக்கமளிக்குமாறு கோரி மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) தாக்கீது அனுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்