பாலியல் புகார்: பதவி விலகினார் என்.டி. திவாரி

சனி, 26 டிசம்பர் 2009 (17:55 IST)
பாலியல் குற்றச்சாற்றுக்கு ஆளான ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி தனது ஆளுநர் பதவியை விட்டு விலகியிருக்கிறார்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து வெளிவரும் தனியார் தொலைக்காட்சி சேனலில், திவாரி 3 இளம்பெண்களுடன் இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகின. இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என்று மகளிர் அமைப்பினரும், ஆந்திராவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.

ஆளுநர் மாளிகை முன்பு மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தம்மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாற்றை மறுத்தார் என்.டி. திவாரி.

இதனிடையே தமது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக என்.டி. திவாரி அறிவித்துள்ளார்.

அவர் தமது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

திவாரியின் பதவி விலகல் முடிவை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

தம் மீதான புகாருக்கு தார்மீகப் பொறுப்பேற்று அவர் பதவி விலகியிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

திவாரியின் பாலியல் வீடியோ காட்சிகள் வெளியானது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்கள் புதுடெல்லியில் இன்று காலை கூடி ஆலோசனை நடத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் மீதான மதிப்பு குறைந்து விடக்கூடும் என்பதால், திவாரியை பதவி விலகுமாறு ஏற்கனேவே கட்சி மேலிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மாநில அரசிடம் திவாரிக்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

முன்னதாக ஏ.பி.என் ஆந்திர ஜோதி தொலைக்காட்சி சேனல், திவாரி குறித்த காட்சிகளை ஒளிபரப்புவதற்கு தடை விதிக்குமாறு ஆளுநர் மாளிகை தரப்பில் உயர் நீதிமன்றத்தை அணுகி கேட்டுக் கொண்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்