பர்கா பயணியால் பீதி: கொல்கத்தா விமானம் அவசரமாக தரையிறக்கம்

புதன், 5 மே 2010 (18:04 IST)
கொல்கத்தா வந்துகொண்டிருந்த "ஸ்பைஸ் ஜெட்" விமானத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

புனேவிலிருந்து இன்று டெல்லி வழியாக கொல்கத்தா சென்று கொண்டிருந்த "ஸ்பைஸ் ஜெட்" விமானத்தில் இருந்த இரண்டு ரஷ்ய பயணிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்தது.

அதில் ஒரு பெண் பர்கா அணிந்திருந்தார்.இதனால் சந்தேகம் மேலும் வலுவடைந்தது. அந்த பெண்ணை முகத்தை மூடியிருக்கும் பர்காவை அகற்ற சொன்னபோது அவர் மறுத்துவிட்டார்.

இதனால் சந்தேகம் மேலும் வலுத்ததால், விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க கொல்கத்தா விமான நிலையத்தில் அனுமதி கோரினார்.

இதையடுத்து உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு அந்த விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.

அதற்கு முன்னதாகவே அங்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட அதிகாரிகள், விமானத்தில் ஏறி பயணிகளை கீழே இறக்கி, விமானம் முழுவதும் சோதனை நடத்தினர்.

அத்துடன் சந்தேகத்துக்கு இடமான 2 பேரையும் தனியாக அழைத்துச் சென்று சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதில் சந்தேகப்படும்படியான பொருள் எதுவும் அவர்ளிடம் இல்லை என்பது தெரிய வந்தது. அத்துடன் பர்கா அணிந்திருந்த பெண் ஓங்குதாங்காக நல்ல உயரமான உடல்வாகுடன் இருந்ததால், அது ஆணாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழ வாய்ப்பாக அமைந்து விட்டதாகவும் அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்