தெலங்கானா போராட்டம்: ரயில்வேக்கு ரூ.11 லட்சம் வருவாய் இழப்பு

செவ்வாய், 27 செப்டம்பர் 2011 (13:25 IST)
தெலங்கானா போராட்டத்தால் தெற்கு ரயில்வேக்கு ரூ.11.69 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தனித் தெலங்கானாவை வலியுறுத்தி கடந்த 24 ஆம் தேதி காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

இந்தப் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம், கேரளத்தில் இருந்து தெலங்கானா வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்றும், ஹைதராபாத் செல்லும் ரயில்கள் விஜயவாடா, குண்டூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 23-ம் தேதி சில எக்ஸ்பிரஸ் ரயில்களும், 24, 25-ம் தேதிகளில் 38 ரயில்களும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.

ஹைதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் விஜயவாடாவிலும், காச்சிகுடா எக்ஸ்பிரஸ் கர்னூலிலும், திருவனந்தபுரம் - ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் குண்டூரிலும் நிறுத்தப்பட்டன.

இதனால் தெற்கு ரயில்வேக்குட்பட்ட சென்னை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்தனர்.

இவ்வாறு ரத்து செய்தப் பயணிகளுக்கு முன்பதிவு கட்டணத்தையும் சேர்த்து, முழுத் தொகையையும் தெற்கு ரயில்வே திருப்பி வழங்கியுள்ளது.

இதனால் 3 நாட்களில் தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ. 11 லட்சத்து 69 ஆயிரத்து 423 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்