கவலை வேண்டாம் - திரைவிமர்சனம்

சனி, 26 நவம்பர் 2016 (11:32 IST)
யாமிருக்க பயமேன் இயக்குனர் டீகே இயக்கத்தில், ஜீவா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சுனைனா, ஆர்.ஜே.பாலாஜி, கருணாகரன், மயில்சாமி ஆகியோர் நடிப்பில், லியோன் ஜேம்ஸ் இசையில், அபிநந்தன் ராமானுஜம் ஓளிப்பதிவில் வெளிவந்திருக்கும் படம் கவலை வேண்டாம்.


 


 
 
ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணம் செய்த சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து போகிறார்கள். 
 
பின்னர், ஜீவா சொந்தமாக ரெஸ்ட்ராண்ட் ஆரம்பிக்கிறார். காஜல் அகர்வாலுக்கும், பாபி சிம்ஹாவுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. மறுமுனையில் ஜீவாவை சுனைனா ஒருதலையாக காதலித்து வருகிறார். 
 
இந்நிலையில், பாபி சிம்ஹாவை திருமணம் செய்துகொள்வதற்காக ஜீவாவை முறைப்படி விவாகரத்து செய்ய காஜல் அகர்வால் முடிவெடுக்கிறார். இதற்காக ஜீவாவிடம் விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க செல்கிறார். 
 
அனால், ஜீவா தன்னுடன் ஒருவார காலம் தங்கியிருந்தால் தான், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு தருவதாக சொல்கிறார். 
 
இதையடுத்து, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ஜீவா, சுனைனா மற்றும் நண்பர்கள், என ஒரு பெரிய பட்டாளமே ஒரே வீட்டில் தங்குகிறது. 
 
இறுதியில் ஜீவாவுக்கும் காஜலுக்கும் விவாகரத்து நடந்ததா? இல்லையா? யார், யாரை திருமணம் செய்தார்கள்? என்பதே லாஜிக் இல்லாத மீதிக்கதை. 
 
ஜீவா அசால்ட்டாக தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நக்கல், நையாண்டி காட்சிகள் அவருக்கு கைவந்த கலை என்பதால் வெகு இயல்பாக நடித்திருக்கிறார்.
 
காஜல் அகர்வால், தனது துறு துறு நடிப்பால் படத்தை விறுவிறுப்பாக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் முடியவில்லை.
 
பாபி சிம்ஹா, சுனைனா இருவரும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால் இருவருக்கும் பெரிய வேலையில்லை. ஆர்.ஜே.பாலாஜி ரொம்ப ஓவர், ஆனாலும் காமெடிக்கு கொஞ்சம் துணை நின்றிருக்கிறார்கள். 
 
படம் முழுக்க நகைச்சுவையை மட்டுமே நம்பி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் டீகே. ஆனால் அந்த நகைச்சுவை ரசிக்கும்படி இல்லாதது படத்திற்கு பெரிய தொய்வு. 
 
படத்திற்கு மிகப்பெரிய பலம் அபினந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு.  லியோன் ஜேம்ஸ்-ன் இசையில் பாடல்கள் ஒகே. 
 
நிறைய லாஜிக் மீறல்கள், வரம்பு மீறிய டபுள் மீனிங், போன்றவை பேமிலி ஆடியன்ஸ் நிச்சயம் இப்படத்திற்கு வருவது கடினமாக்குகிறது.
 
மொத்தத்தில் ‘கவலை வேண்டாம்’ கவலை பட வேண்டிய ஒன்று.
 

வெப்துனியாவைப் படிக்கவும்