தர்மதுரை - விமர்சனம்

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (15:58 IST)
இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து, இன்று உலகெமெங்கும் வெளியான படம் தர்மதுரை. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் வெளியாகியுள்ளது.


 

 
இவர்கள் இருவரும் இணைந்து  ‘இடம் பொருள் ஏவல்’ என்ற திரைப்படம் துவக்கப்பட்டது. என்ன காரணத்தினாலோ அப்படம் இன்னும் வெளியாகவில்லை.
 
தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதி, ராதிகா, தமன்னா, சிருஷ்டி டாங்கே மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையத்துள்ளார்.
 
கிராமத்தில் தொடங்குகிறது படம். மருத்துவரான விஜய் சேதுபதி மது அருந்தி கொண்டு, வெட்டியாக ஊரை சுற்றி வருகிறார். இதனால் அவரின் அண்ணன், தம்பி  என அனைவரின் வெறுப்புக்கும் ஆளாகிறார். ஆனால் அவரின் தாய் ராதிகா மட்டும் (வழக்கமான தமிழ் சினிமா போல்) அவரின் அன்பு மழை பொழிகிறார்.
 
ஒரு கட்டத்தில் அவரால் பிரச்சனைகள் ஏற்பட, கிராமத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை விஜய் சேதுபதிக்கு. அதன் பின் அவர் தனக்கு பிடித்தமான இடங்கள், பிடித்தமான நபர்கள் என அனைத்தையும் தேடி செல்கிறார்.
 
அவரின் கடந்த கால வாழ்க்கையில் என்ன நடந்தது. அவர் ஏன் இப்படி ஆனார் என்பது பற்றி படத்தின் இயக்குனர் சீனுராமசாமி உணர்ச்சி  பூர்வமாக கூறியுள்ளார்.
 
நடிப்பை பொறுத்தவரை, வழக்கம் போல் விஜய் சேதுபதி படத்தை தனது தோளில் தூக்கி சுமக்கிறார். எந்த கதாபாத்திரம் என்றாலும், அதுவாக மாறுகிறார். குடித்துவிட்டு ஆங்கிலம் பேசும் போதும், கலாட்டாக்கள் செய்யும் போதும் திறைமையான நடிப்பை வழங்குகிறார். அதுபோல் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் நம்மை அழ வைக்கிறார்.  ஐஸ்வர்யாவின் நடிப்பும் பாராட்டும் படி உள்ளது.
 
படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் பகுதியில், விஜய்சேதுபதியின் கல்லூரி வாழ்க்கை காட்டப்பட்டுள்ளது. அதில் தமன்னா மற்றும் சிருஷ்டி டாங்கே ஆகியோர் அவருடன் படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவிகளாகவும், அவரது தோழிகளாகவும் வருகிறார்கள்.
 
விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் இடம் பெற்ற பெண்கள், அவர்களால் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகிய அனைத்தும் இப்படத்தில் நேர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை பற்றி குறை கூறாமல், ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பெண்களை பற்றி காட்சி படுத்தியதற்காக  இயக்குனர் சீனுராமசாமியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
 
முக்கியமாக, விஜய் சேதுபதியின் அம்மாவாக வரும் ராதிகாவின் நடிப்பு படு யதார்த்தம். எத்தனை தவறு செய்தாலும், தன் பிள்ளையின் மீது அதீத பாசம் வைக்கும் தாயை நம் கண் முன்னே கொண்டு வருகிறார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில்  ‘மக்க கழங்குதுப்பா’ குத்து பாடல் கண்டிப்பாக ஹிட். பின்னணி இசையிலும் கிராமிய மணம். யதார்த்தமான சுகுமாரின் ஒளிப்பதிவு, காட்சிகளை கண் முன் நிறுத்துகிறது. 
 
ஆனால், படத்தின் இரண்டாம் பகுதி உணர்ச்சிகரமாக இருப்பதால், கொஞ்சம் நீளமாக இருப்பது போல் தோன்றுகிறது. கொஞ்சம் விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம். தெரியாமல் விஜய்சேதுபதி அந்த பணத்தை எடுத்திருந்தாலும், அவ்வளவு நாட்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதில் லாஜிக் இல்லை. 
 
சீனுராமசாமியின் இனிமையான இயக்கத்திற்காகவும், விஜய் சேதுபதியின் அருமையான நடிப்பிற்காகவும் படத்தை நிச்சயம் பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்