பயம் ஒரு பயணம் - திரை விமர்சனம்

சனி, 27 ஆகஸ்ட் 2016 (13:01 IST)
தமிழ் சினிமா திரையுலகம் பேய் பட ஜுரத்தில் இருக்கிறது. வேறு இயக்குனர்கள் வேறு மாதிரி படங்கள் எடுத்தாலும் ஏராளமான பேய் படங்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. அதுபோல் கடந்த வியாழக்கிழமை வெளியான படம் ‘பயம் ஒரு பயணம்’.


 

 
படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர்களை பார்த்துவிட்டு, படுதிகிலான படமாக இருக்கும் என்று எதிர்பார்போடு உள்ளே போனால், ஏமாற்றத்தையே தருகிறது இப்படம்.
 
படம் தொடங்கி 10 நிமிடங்கள் நமக்கு திகிலை ஏற்படுத்துகிறார்கள். அதன்பின் வழக்கமான தமிழ் சினிமா பாதியில் பயணிக்கிறது படத்தின் கதை.
 
தமிழ் சினிமாவில் வழக்கமாக காட்டப்படும் கதாநாயகி விஷாகா சிங் அச்சு அசல் அப்படியே. அம்மா, அப்பாவிற்கு செல்ல மகளாக காட்டப்பட்டிருக்கும் விஷாகாசிங் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களோடு புது வருடம் கொண்டாட ஒரு மலைப்பகுதிக்கு செல்கிறார். 
 
குடியும், கும்மாளமுமாக கூத்தடிக்கிறார்கள் ஐ.டி. ஊழியர்கள். விஷாகாசிங் அருந்தும் குளிர்பானத்தில் அவருக்கு தெரியாமல் மதுவை கலந்துவிடுகிறார்கள் நண்பர்கள். 
 
அப்போது, தங்களை கலாச்சார சேவகர்களாக காட்டிக்கொள்ளும் ஒரு கும்பல் அந்த வீட்டிற்குள் புகுந்து அவர்களை அடித்து நொறுக்குகிறார்கள். தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓட, மதுபோதையில் மயங்கி இருக்கும் கதாநாயகி மட்டும் அவரிடம் மாட்டிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவர்கள் விஷாகாவை கொலை செய்துவிட, அவர் பேயாய் மாறி எப்படி அனைவரையும் பழி வாங்குகிறார் என்பதுதான் கதை.
 
கொலை நடந்த அதே வீட்டிற்கு வரும் கதாநாயகன் பரத்ரெட்டியை அந்த பேய் விரட்டோ விரட்டென்று துரத்துகிறது. பேயிடமிருந்த தப்பிக்க மலைப்பகுதியில் படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார் பரத்ரெட்டி. அவர் மீது அந்த பேய்க்கு என்ன கோபம் என்பதை பிறகு விளக்குகிறார்கள். பரத்ரெட்டி பயந்து ஓடும்போது சந்திக்கும் அனைவரும் பேயாகவே இருக்கிறார்கள். இதனால் யார் நிஜம், யார் பேய் என்பது குழப்பமாகவே இருக்கிறது.
 
படம் முழுக்க மலைப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளதால் ஒளிப்பதிவாளருக்கு அதிக வேலை. அதை அழகாக செய்திருக்கிறார் ஆண்ட்ரூ. பேய் படத்திற்கு  பலம் பின்னணி இசைதான். அதில் ஸ்கோர் செய்கிறார் ஒய்.ஆர்.பிரசாத். ‘யாரது’ பாடல் நம்மை பயமுறுத்துகிறது.
 
படத்தின் தொடக்கத்தில் ஸ்கோர் செய்திருக்கும் இயக்குனர் மணிஷர்மா, போகப் போக போரடிக்க வைக்கிறார். திரைக்கதை பலவீனமாக உள்ளதால் பார்வையாளர்களை படம் பெரிதாக கவரவில்லை என்பது நிதர்சனம்.

வெப்துனியாவைப் படிக்கவும்