காதலும் கடந்து போகும் - விமர்சனம்

வெள்ளி, 11 மார்ச் 2016 (16:25 IST)
‘மை டியர் டெஸ்பெரடோ’ என்ற கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ மறுப்பதிப்பான ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் பெரிய அளவில் விஷயங்கள் இல்லாமல், எளிமையான கதை, திரைக்கதை அமைப்பில் வெளிவந்திருக்கிறது.


 
 
நலன் குமாரசாமி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், சமுத்திரக்கனி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திருத்தில் நடித்திருக்கிறார்கள்.
 
எஞ்சினியரிங் படித்த நாயகி மடோனா பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஐடி கம்பெனியில் வேலைக்கு செல்கிறார். எதிர்பாராத விதமாக அவர் வேலை பார்த்த கம்பெனி திவாலாகி வேலையை இழக்கிறார். வீட்டுக்கு சென்றால் எங்கே தன்னை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று எண்ணி நாயகி சென்னையில் வாடகை வீடெடுத்து வேறு வேலை தேடி வருகிறார். நாயகி மடோனாவின் வீட்டருகே விஜய் சேதுபதி ரவுடி கும்பலிடம் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல இருவரும் காதல் வசப்படுகிறார்கள்.


 
 
விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டின் கதைக்கு பொருத்தமான தேர்வு. பெரிதாக அலட்டிக்காமல் கதைக்கு ஏற்ப இருவரும் சகஜமாக நடித்திருப்பது படத்தின் பலம். சிறிது நேரம் வந்து போகும் சமுத்திரகனியும் தன் பங்குக்கு நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
 
குடும்பத்துடன் பார்க்கும் காட்சிகளே படத்தில் அதிகமாக வருகின்றன. விஜய் சேதுபதியும், மடோனாவும் பேசும் வசனங்கள் நம்மை நன்றாகவே சிரிக்க வைக்கின்றன. படத்தில் நகைச்சுவைக்கு இயக்குனர் சிறப்பாக உழைத்திருப்பது புரிந்து கொள்ள முடிகிறது.
 
சூது கவ்வும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணனை இந்த படத்திற்கும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி. காட்சிகளை எதார்த்தமாகவும், இயல்பாகவும் எடுத்திருப்பது படத்திற்கு வலு சேர்க்கிறது.
 
சந்தோஷ் நாரயணன் இசையில் கககபோ பாடல் அருமை. பின்னணி இசையும் படத்தின் கதைக்கேற்ப பயணிக்கிறது.
 
மொத்தத்தில் காதலும் கடந்து போகும் சொதப்பல் இல்லாத சாதரண திரைப்படம்.

வெப்துனியாவைப் படிக்கவும்