மறந்தேன் மன்னித்தேன்

திங்கள், 25 மார்ச் 2013 (20:38 IST)
கோதாவ‌ரி ஆற்றில் எண்பதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பல உயிர்களை பலி வாங்கியது. ஆந்திராவில் பலநூறு குடும்பங்களை வீடற்றவர்களாக்கியது. அந்த துயரச் சம்பவத்தின் பின்னணியில் மறந்தேன் மன்னித்தேன் எடுக்கப்பட்டுள்ளது என்ற போது படத்தின் மீது ஒருவித ம‌ரியாதையும் எதிர்பார்ப்பும் எழுந்தது இயல்பானது.

ஆந்திராவில் படம் வெளியான ஒருவாரத்துக்குப் பின் தமிழில் வெளியாகியிருக்கிறது.

FILE
காஞ்சிபுரத்தை சேர்ந்த லட்சுமி மஞ்சு ஆந்திரா வந்து ஆதியை திருமணம் செய்கிறார். பொதுவாக மணமகன்தான் மணமகளின் ஊருக்கு வந்து திருமணம் செய்வான். இது ஆந்திரா வழக்கம் போலிருக்கிறது. திருமணத்தன்று தாப்ஸி ஆதிக்கு ஒரு மோதிரம் ப‌ரிசளிக்கிறார். லட்சுமி மஞ்சுவின் முதலாளி காஞ்சிபுரத்திலிருந்து வந்து மஞ்சுக்கு செயின் ஒன்றை ப‌ரிசளிக்கிறார். அவர்கள் ஏன் இவர்களுக்கு ப‌ரிசளிக்க வேண்டும்?

பரஸ்பரம் எழுந்த சந்தேகத்தால் ஊருக்குள் வெள்ளம் வந்ததைகூட அறியாமல் மணமக்கள் அப்படியே இருக்க, இருவரும் ஆற்றோடு அடித்துச் செல்லப்படுகிறார்கள். அதிர்ஷ்டவசமாக வைக்கோல்போர் ஒன்றில் ஏறிக்கொள்கிறவர்கள் ஆற்றின் போக்கில் போய்க்கொண்டே தங்களின் கடந்தகால வாழ்க்கையை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த கதைகள்தான் படம்.

ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் ஒரு படம் உண்டு. அப்பா பேப்பர் படித்துக் கொண்டிருப்பார், அம்மா தோசை சுட்டுக் கொண்டிருப்பார், அண்ணன் படித்துக் கொண்டிருப்பான், பாப்பா விளையாடிக் கொண்டிருக்கும். அதுபோன்று சினிமாவிலும் ஓராயிரம் டெம்ப்ளேட் கதைகள் உண்டு. ஆதியின் கதையும் அதேதான். ஆதி கோதாவ‌ரியில் மீன் பிடிப்பவர். அவ‌ரின் முதலாளியின் மகள் - தாப்ஸி - ஆதியை காதலிக்கிறார். முதலாளிக்கு‌த் தெ‌ரிந்ததும் ஆதிக்கு படகு மறுக்கப்படுகிறது. கள்ளச்சாரயம் வைத்திருந்ததாக போலீஸார் பிடித்துக் கொண்டு போகிறார்கள். டேய்... முதலாளி என்று பாய்ந்து வரும் ஆதியை தடுத்து, அவரைத்தானே பழிவாங்கணும், என்னை யூஸ் பண்ணிக்க, அதுதான் ச‌ரியான தண்டனை என்று தாப்ஸி ஆதிக்கு தனது அந்தரங்கத்தை ப‌ரிசாக்குகிறார். தாப்ஸிக்கு ஆதி மீது இருப்பது காதலா? இல்லை அது சும்மா டைம்பாஸ் காமமா? எதுவாக இருந்தாலும் அவர் ஏன் வில்லி மாதி‌ரி சி‌ரித்துக் கொண்டே ஆதிக்கு மோதிரம் தர வேண்டும்?

கிழக்குவாசல் தாயம்மா கதைதான் மஞ்சுவினுடையது. அனாதையான மஞ்சுக்கு அடைக்கலம் தருகிற பெண்மணி உடம்பை விற்று பிழைப்பவள். ஆனால் மஞ்சு சொக்கத்தகங்கம். அடைக்கலம் தந்தவளின் மகனை காதலிக்கிறார். அம்மாவைப் போல மஞ்சுவும் உடம்பை விற்று பிழைப்பவள்தானோ என்று காதலனுக்கு சந்தேகம். காதல் டமாலாகிறது. நடுவில் மஞ்சுக்கு ரூட்விடும் முதலாளி.

இந்திய சினிமா பலமுறை அரைத்து சக்கையாக துப்பியதை யதார்த்தத்தின் சுவடே இல்லாமல் எடுத்திருக்கிறார் இயக்குனர் குமார் நாகேந்திரா. இந்த அரைவேக்காடு காதல் கதைக்கு கோதாவ‌ரியின் வெள்ளப்பெருக்கு பின்னணி எதற்கு?

தயா‌ரிப்பாளர் என்பதற்காக இளமையான மகேஷுக்கு லட்சுமி மஞ்சு ஜோடியாக நடித்திருப்பது கொடுமை. நாடகத்தனமான காட்சிகள், நாடகத்தனமான நடிப்பு. மருத்துவரும், மஞ்சுவின் முதலாளியாக வருகிறவரும் பொறுமையின் எல்லைக்கே நம்மை தள்ளுகிறார்கள். சின்ன ஜாக்கெட், முட்டிவரை வரும் பாவாடை என பாதி உடம்பு தெ‌ரியும் வளையல்கா‌ி கதாபாத்திரம் மோசமான ரசனையின், கற்பனை வறட்சியின் உச்சகட்டம்.

படத்தில் உயிர்ப்புடன் தெ‌ரிவது கலை இயக்கமும், வெள்ளப்பெருக்கை சி‌ஜி-யில் உருவாக்கியிருப்பதும். குறிப்பிட வேண்டிய இன்னொன்று இளையராஜாவின் பின்னணியிசை. பல இடங்களில் இளையராஜாவின் இசை, படம் தரும் அயர்ச்சியை தாண்டி கவர்கிறது. குறிப்பாக மஞ்சு எந்த தவறும் செய்யவில்லை என்பதை மகேஷ் உணரும் தருணம். கிளாஸ்.

ஜானி படத்தில் மகேந்திரன் அற்புதமாக படமாக்கிய ஆசைய காத்துல ூதுவிட்டு.... பாடலை ரெக்கார்ட் டான்ஸ் அளவுக்கு தரம்தாழ்த்தி, அதைவிட தரம்தாழ்ந்த கேமரா கோணத்தில், வேறு வார்த்தைகள் போட்டு பயன்படுத்தியிருக்கிறார்கள். இளையராஜஎப்படி ஒத்துக் கொண்டார்? எதற்காக இல்லாவிட்டாலும் இந்த ஒன்றுக்காக இந்தப் படத்தை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.

அனைவரையும் கவரக்கூடிய வரலாற்று நிகழ்வை பின்னணியாகக் கொண்டு வழக்கமான அரைவேக்காடு காதலை சொல்லும் ஊசிப்போன பண்டம்தான் படம்தான் இதுவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்