முன்னோட்டம் - சதுரங்க வேட்டை

வியாழன், 17 ஜூலை 2014 (11:08 IST)
பணம் இருந்தா என்ன வேணா செய்யலாம் என்று நினைக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய கதைதான் இந்த சதுரங்க வேட்டை. எச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தை நடிகர் மனோபாலா தயாரித்துள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது.
சதுரங்க வேட்டையில் நடித்திருப்பவர் இந்தியில் முன்னணி கேமராமேனாக இருக்கும் நட்டு என்கிற நட்ராஜ். நம்மூர்க்காரர். நடிப்பு ஆசை வரும்போதெல்லாம் தாய்மொழி தமிழில் ஒரு படம் நடிப்பார். விடுமுறைகால நடிகர் என்பதால் அவரை பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. ஏன், பலருக்கு அவரை தெரியவே தெரியாது. படத்தை இயக்கியிருக்கும் வினோத் புதியவர். படம் தயாரான போதும், ரிலீஸுக்கு ரெடியான போதும் பத்தோடு பதினொன்றாகவே இருந்தது. படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு அனைத்தும் மாறிப் போனது.
 
ட்ரெய்லரைப் பார்த்தவர்கள் படம் நன்றாக இருக்கும் போலிருக்கே என்று ஆச்சரியப்பட்டனர். ரஜினிகாந்த் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு மனோபாலாவை போனில் அழைத்து பாராட்டினார். இது உற்சாகமளிக்க லிங்குசாமிக்கு படத்தை திரையிட்டனர். வாரத்துக்கு பத்து படங்கள் பார்க்கச் சொல்லி லிங்குசாமிக்கு அழைப்பு வருகிறது. அதனால் வேண்டா வெறுப்பாகதான் சதுரங்க வேட்டையை பார்க்க உட்கார்ந்திருக்கிறார்.
 
அரைகுறை உறக்கத்திலிருந்தவரை படம் எழுப்பிவிட்டது. படம் முடிந்ததும் அவர் எடுத்த முடிவு, படத்தை திருப்பதி பிரதர்ஸே வெளியிடும்.
 
அதன் பிறகு படத்தின் தலையெழுத்து மாறியது. எதிர்பார்ப்புக்குரிய படமானது சதுரங்க வேட்டை. படத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமின்றி பாலாஜி சக்திவேல், சசி, கார்த்திக் சுப்பாராஜ் என முன்னணி இயக்குனர்களுக்கு படத்தை திரையிட்டு காட்டி அவர்களையும் பிரஸ்மீட்டில் அழைத்து வந்து பேச வைத்தார். முன்னணி இயக்குனர்களை அசத்திய படம் எப்படியிருக்கும் என்று பார்க்க ரசிகர்கள் ஆவல் கொண்டு இருக்கிறார்கள். 250 திரையரங்குகளில் படம் வெளியாகிறது.
 
நாளை படம் வெளியாகிறது. ஷான் ரோல்டன் படத்துக்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் வைரமுத்து. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் திருப்பதி பிரதர்ஸ் இந்த வருடம் வெளியிட்ட கோலிசோடா, மஞ்சப்பை வரிசையில் வெற்றி பெறுமா? 
 
நாளை தெரிந்துவிடும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்