முன்னோட்டம் - வேலையில்லா பட்டதாரி

வியாழன், 17 ஜூலை 2014 (11:13 IST)
வேலையில்லா பட்டதாரி தனுஷின் 25 -வது படம். பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். ஒளிப்பதிவும் அவரே. தயாரிப்பு தனுஷின் வுண்டர்பார்.
தனுஷின் முந்தையப் படங்களான நய்யாண்டி, மரியான் தோல்வியடைந்ததால் வேலையில்லா பட்டதாரியை கண்டிப்பாக வெற்றிக் கோட்டில் நிறுத்தியாக வேண்டிய கட்டாயம் தனுஷுக்கு. அதற்கான கரம் மசாலாக்கள் படத்தில் இருப்பதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது.
 
தனுஷின் அப்பாவாக சமுத்திரகனியும், அம்மாவாக சரண்யா பொன்வண்ணனும் நடித்துள்ளனர். அமலா பால் ஹீரோயின். சின்ன வேடம் ஒன்றில் சுரபி நடித்துள்ளார். காமெடி ஏரியாவை கவர் செய்திருப்பது நடிகர் விவேக். வேலையில்லா பட்டதாரியின் பலம் இசையும் பாடல்களும். அனிருத்தின் துள்ளான பாடல்கள் ஏற்கனவே ஹிட். 
தனுஷ் இதில் இன்ஜினியரிங் கிராஷுவேட்டாக நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்காக இரண்டு நாள்கள் தண்ணி குடிக்காமல் சிக்ஸ்பேக் வைத்துள்ளார். ஆனால் இது கதைக்கு கண்டிப்பாக தேவை எல்லாம் கிடையாது, எக்ஸ்ட்ரா அட்ராக்ஷன் மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
 
படம் இயக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்டநாள் ஆசை. அதற்கு முன்னோட்டமாக படத்தின் காட்சி, வசனம், ஷாட் வைப்பது என அனைத்திலும் தனது பங்களிப்பை செலுத்தியுள்ளார். வேல்ராஜ் இயக்கம் என்பது ஏறக்குறைய பினாமி மாதிரி என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். படத்தின் பாடல்களையும் தனுஷே எழுதியுள்ளார். 
 
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளார். ஒரே நாளில் அனைத்து ஏரியாக்களும் விலை போனதாக கூறப்படுகிறது.
 
நாளை 350 திரையரங்குகளில் வேலையில்லா பட்டதாரி வெளியாகிறது. படத்துக்கு சென்சார் தந்திருப்பது யு சான்றிதழ்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்