நான் சவுக்கு மரம் - நாகேஷ் சொன்ன உவமை

புதன், 4 மே 2016 (11:56 IST)
தமிழ் சினிமாவில் அங்கீகாரம் மறுக்கப்பட்ட கலைஞர்களில் மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷும் ஒருவர். 
 
நகைச்சுவை மட்டுமில்லை குணச்சித்திரமும் வரும் என்பதை சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நிரூபித்தவர். 
 
நாகேஷுக்கு மத்திய அரசின் தேசிய விருது வழங்கப்பட்டதில்லை. நம்மவர் படத்திற்காக வழங்கப்பட்ட உதிரி விருது நாகேஷின் திறமைக்கு முன்னால் ஒன்றுமேயில்லை.
 
மலையாளத்தில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த சலீம்குமார் ஆதாமின்டெ மகன் அபு படத்தில் குணச்சித்திர வேடத்தில் தனது திறமையை நிரூபித்ததும், அப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது அளித்தனர். 


 
 
அதேபோல் இன்னொரு மலையாள நகைச்சுவை நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு, பேராறியாதவர் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்ததும் அவருக்கு தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். இவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் நாகேஷுக்கு வழங்கப்படவில்லை. 
 
அதேபோல் எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருபெரும் நடிகர்களின் படங்கள் வெற்றி பெற்றதில் நாகேஷின் பங்களிப்பு நிறைய உண்டு. அன்று சிவாஜி படத்தில் ஒரு நடிகை நடித்தால் அவரை எம்.ஜி.ஆர். தனது படத்தில் நடிக்க வைக்க தயங்குவார். எம்.ஜி.ஆருக்கு ஒருவர் கதை எழுதினால் சிவாஜி அவரை விலக்குவார். இப்படி போட்டியும், 
 
பொறாமையுமாக இருந்தவர்கள் ஒருவர் விஷயத்தில் மட்டும் ஈகோ பார்ப்பதில்லை. அவர் நாகேஷ். நாகேஷ் இருந்தால்தான் தங்கள் படங்களுக்கு எக்ஸ்ட்ரா மைலேஜ் கிடைக்கும் என்பதை அவர்கள் இருவரும் அறிந்திருந்தனர். 
 
நாகேஷுக்கு உரிய அங்கீகரம் இல்லை என்ற குற்றச்சாட்டு அவர் வாழ்ந்த காலத்திலேயே இருந்தது. 
 
சிட்னியிலிருந்து ஒலிபரப்பப்பட்ட தமிழ் முழுக்கம் வானொலிக்கு நாகேஷ் பேட்டியளித்த போது, இந்த  கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு நாகேஷ் அளித்த பதில் அவரது முதிர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
 
வானொலி் - நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
 
நாகேஷ் -  நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிரகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.
 
- அதுதான் நாகேஷ்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்