காதல் திருமணம் : பஞ்சாயத்தில் மரண தண்டனை

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (12:48 IST)
மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் முஸ்லிம் பெண்ணை மணந்த வாலிபருக்கு, உள்ளூர் பஞ்சாயத்தில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு அது நிறைவேற்றப் பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள லக்ஷன்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனேரா பிபி. இவர் மும்பையில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷைலேந்திர பிரசாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது இந்த தம்பதிகளுக்கு 10 மாதத்தில் குழந்தை இருக்கிறது.

இதுவரை இந்த காதலர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கடந்த ஜூலை 1ஆம் தேதி முனேரா பிபி தனது சொந்த கிராமத்திற்கு தனது கணவன் மற்றும் குழந்தையுடன் செல்லத் துணிந்ததுதான் பெரும் பிரச்சினையாகிவிட்டது.

தனது கணவனின் உண்மையான மதத்தை மறைத்துவிட்டு முன்னா ஷேக் என்ற பெயருடன் அவர்கள் கிராமத்திற்குள் நுழைந்தனர்.

ஆனால் முனேராவின் தந்தைக்கு தனது மருமகனின் மதத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டு அவன் உண்மையான முஸ்லிம் இல்லை என்பதை தெரிந்து கொண்டார்.

முஸ்லிம் மதத்தவர், மற்றொரு மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்வது அந்த கிராமத்தில் பெரும் குற்றம்.

ஜூலை 14ஆம் தேதி, அந்த ஊர் பஞ்சாயத்தில் முனேரா பிபியின் தந்தை புகார் அளித்தார்.

இதையடுத்து 18ப் பட்டி பஞ்சாயத்துக் கூடியது. சுமார் 22 'மூத்தக் குடிமக்கள்' தலைமையில் நடந்த பஞ்சாயத்தில், ஷைலேந்திர பிரசாத் கொண்டு வரப்பட்டு அவரது உண்மையான மதத்தையும் பெயரையும் கேட்டறிந்து கொண்டனர்.

பின்னர், மதம் மாறி திருமணம் செய்த குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தனர் அந்த மூத்த குடிமக்கள்.

இதையடுத்து ஜூலை 17ஆம் தேதி வயல்வெளியில் தலையில்லாத உடல் பகுதி கோணிப் பையில் கிடந்துள்ளது. ஆனால் இது பற்றி காவல்துறைக்கு எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை. மேலும், அந்த உடல் யார் என்பதையும் காவலர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனது.

இது நடந்து சுமார் 10 நாட்கள் கழித்து முனேரா பிபி மற்றும் அவரது தாயாரும், சகோதரனும் பெஹ்ராம்புர் காவல்நிலையத்திற்கு வந்து நடந்த கொடுமைகள் பற்றி புகார் கொடுத்தனர்.

அதன்பிறகுதான் காவல்துறைக்கு முழு விவரமும் தெரிய வந்துள்ளது.

இந்த கொலையில் தொடர்புடைய 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

10 நாட்கள் கழித்து காவல்நிலையம் வந்த பெண்ணிடம், இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்டதற்கு, விஷயம் தெரிந்ததுமே நாங்கள் காவல்நிலையத்திற்கு வரத் துடித்தோம். ஆனால் அந்த கிராமத்தினர் எங்களை வர விடாமல் வீட்டிற்குள் வைத்துப் பூட்டி, காவல்நிலையத்திற்குச் சென்றால் உங்களுக்கும் அதே கதிதான் என்று மிரட்டினர் என்று முனேரா பிபி கூறினார்.

முனேரா பிபியின் தந்தை மற்றும் கிராமத்து மூத்த குடிமக்கள் பலரும் தலைமறைவாக உள்னர்.

வெப்துனியாவைப் படிக்கவும்