நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தை என தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதேபோல் பாஜகவும், அதிமுகவும் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்க்க பாஜக காய் நகர்த்தி வருகிறது.
இதனிடையே வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளிடம் பேசிய புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட இருப்பதாக கூறியுள்ளார்.