ஆஸ்த்ரிய-ஹங்கேரிய எழுத்தாளரான ப்ரான்ஸ் காஃப்கா, யூத சமயத்தைச் சேர்ந்தவர். மொழியிலும் பண்பாட்டிலும் ஜெர்மானிய இலக்கியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். இவரது இந்த நாவலில் ஜோசஃப் கே என்ற ஒரே பாத்திரத்தின் போராட்டங்களே இந்த நாவலில் பிரதானமாக பேசப்படுகிறது. மற்ற பாத்திரங்கள் எல்லாம் பெரும்பாலும் பெயரற்றவர்கள் அல்லது முகமற்றவர்கள். மேலும் இந்த பாத்திரங்கள் பிரதான பாத்திரமான ஜோஸப் கே இன் மன ஓட்டங்களே.
ஜோசப் கே ஒரு முப்பது வயது பிரம்மச்சாரி, ஒரு வெற்றிகரமான வங்கி ஊழியர். இவருக்கென்று வாழ்க்கையில் பற்றுதல் எதுவுமில்லை. இந்த நாவல் எந்தக் குறிப்பிட்ட இடத்தையும் மையமாகக் கொண்டும் எழுதப்படவில்லை. மேலும் கதை நடைபெறும் நகரத்தைப்பற்றிய எந்த விதமான சிறப்பு குறிப்புகளும் இல்லை.
ஜோசப் கே ஒரு விடுதியில் தங்கியிருக்கிறான். அமைதியான உணவு விடுதியில் மட்டுமே அவன் உணவு உண்ணும் பழக்கமுள்ளவன். இரவு ஒன்பது மணி வரையில் வேலை செய்வான். இவனுக்கென்று நெருங்கிய நண்பர்கள் யாருமில்லை.
ஒரு நாள் காலை அவன் தனது வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தபோது திடீரென இரண்டு காவலர்கள் அவன் விடுதியில் நுழைந்து அவன் சிறை வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பது அவனுக்குத் தெரிந்திருந்தும், நீதிமன்றத்தின் பிடியில் இல்லை என்பதை உணர சற்று நேரம் பிடித்தது. எல்லாமே மர்மமாக இருந்தது, அவன் என்னக் குற்றம் செய்தான் என்பதும் அவனுக்குத் தெரியப்படுத்தவில்லை. இந்த வழக்கில் எந்த சட்டம் இதற்குப் பொருந்தும் என்பதும் அவனுக்குத் தெரியவில்லை.
ஆனால் அவன் அலுவலகத்திற்கும் பிற இடங்களுக்கும் செல்ல அனுமதிக்கப்பட்டான். ஆனால் இவனின் குற்றத்தை தெரிந்து கொண்டவர்கள் போல் நடந்து கொண்டனர் இவன் சந்தித்த மனிதர்கள்.
விசாரணை நடைமுறைகள் அழுக்கடைந்த இடங்களிலும் முடிவற்ற படிக்கட்டுகளைக் கொண்ட உயரே இருக்கும் இடங்களிலும் நடைபெறுகின்றன. எதிர்பாராத மனிதர்கள் நீதிமன்ற அதிகாரிகளாக மாறுகின்றனர். விசாரணை நடைமுறைகள் மிகவும் சிக்கல் நிறைந்ததாகவும் அழுத்தம் உள்ளதாகவும் உருமாறி நீதிமன்ற அதிகாரிகளுக்கே அங்கு என்ன நடைபெறுகிறது என்பது புரியவில்லை. கீழ்மட்ட அதிகாரிகள் ஊழல் நிரம்பியவர்களாக இருக்கின்றனர், அதிகாரம் படைத்த நீதிபதிகள் எங்கோ மூலையில் இருக்கின்றனர், அவர்கள் இருக்கிறார்களா என்பதே சிலருக்கு சந்தேகமாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட மோசமாக வழக்குகள் தீர்க்கப்படாமல், பலர் விடுதலை செய்யப்படாத சூழலும் நிலவுகிறது.
தனது மேல் சுமத்தப்பட்ட குற்றம்தான் என்ன என்பதை ஜொசப் கே அறிய முயலுவதுவதாக கதைப்போக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒருவர் மாற்றி ஒருவரை 'கே' வருடம் முழுவதும் கேட்டுப்பார்த்து தோல்வி அடைந்து விடுகிறான். முதலில் தனக்கு அருகில் குடியிருக்கும் ஃப்ராலின் பாஸ்°ட்னர் என்ற தட்டச்சு ஊழியரிடம் தனக்கு நேர்ந்ததை விளக்குகிறான், ஆனால் அவள் இந்த விஷயத்தில் எந்தவித ஆர்வமும் காட்டாமலிருக்கிறாள்.
ஒரு ஞாயிறன்று அவன் விசாரணை நடைபெறுகிறது. அது மிகவும் கூச்சலும் குழப்பமுமான ஒரு நிகழ்வாக முடிவடைகிறது. அன்று கே தனக்காக வாதாடுகிறான், இதன் மூலம் நீதிமன்றத்தில் கூடியிருக்கும் பார்வையாளர்களின் கருணையைத் தான் பெற்றுவிட்டதாக அனுமானித்துக்கொள்கிறான. இதற்கு அடுத்த வாரம் அவன் மீண்டும் வருகிறான், ஆனால் நீதிமன்றம் ஆள் அரவமற்றுக் காட்சியளித்தது. அவன் சட்டப் புத்தகங்களை எடுத்துப்பார்க்கிறான் ஆனால் அதில் கீழ்த்தரமான சில வரைபடங்களே இருக்கின்றன. நீதிபதிகள் வாசிக்கும் சட்ட புத்தகங்களுக்குப் பதிலாக அபாச புத்தகங்களே அந்த ஆளற்ற அறையில் உள்ளதை ஜோசஃப் கே பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.
நாளடைவில் விசாரணை குறித்த அச்சம் ஏற்படத் துவங்குகிறது இதனால் அவனது வங்கி வேலைகளிள் இடர் ஏற்படுகிறது. ஜோசப்பின் மாமா கார்ல் ஒரு வக்கீலிடம் அவனை அழைத்துச் செல்கிறார். வக்கீலும் அவனது மாமாவும் இந்த வழக்கைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில், நோயாளியான அவரது அறையிலிருந்து ஜோசஃப் வெளியேறி அவரது நர்ஸுடன் காதலில் ஈடுபடுகிறான். இதன் பிறகு அவனது மாமா ஜோசப்பை அவனது செய்க்கைக்காக எச்சரிக்கை செய்கிறார். ஜோசஃப் நீதிமன்றத்திற்கு ஒரு மனு போட விரும்புகிறான் ஆனால் வக்கீல் அது படிக்கப்படாமலேயே போய்விடும் என்று அதை நிராகரித்து விடுகிறார். குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா என்பதே அங்கு கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.
தன்னுடன் இருக்கும் ஒருவரின் ஆலோசனைப்படி கே டிதோரெல்லி என்ற நீதிமன்ற அதிகார பூர்வ வரைபடக்கலைஞனை அணுகுகிறான். அவன் வசிக்குமிடம் ரௌடிகளும் வேசியர்களும் வாழும் ஒரு கீழ்த்தரமான வசிப்பிடமாகும். அவனுக்கு நீதிமன்ற வளாகத்தில் நிறைய செல்வாக்கு இருக்கிறது. இந்த வழக்கு குறித்து அவன் ஜோசஃப்பிடம் ஒரு மூன்று சாத்தியங்களை முன்வைக்கிறான். ஒன்று...
நிச்சய விடுதலை. ஆனால் இது நடைபெற முடியாது. இரண்டாவது தற்காலிக விடுதலை ஆனால் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது காலவரையரையற்ற ஒத்திபோடல், அதாவது விடுதலையுமற்ற தண்டனையுமற்ற ஒரு நிலை. அவனின் இந்த செய்தியைக் கேட்டு ஜோசப் மனமொடிந்து தேவையற்ற சில படங்களை அவனிடம் பெற்றுக்கொண்டு வெளியேறுகிறான்.
அவனது வக்கீலும் வழக்கு குறித்து அலட்சியமாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட ஜோசப் கே, வக்கீலின் இன்னொரு கட்சிக்காரரையும் சந்திக்கின்றான். அவர் ஒரு வியாபாரி. அவருடைய வழக்கும் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படுவது தெரிய வருகிறது. ஜோசப்பின் சந்தேகத்தைக் கண்டு எரிச்சலடைகிறார் வக்கீல், ஆகவே கட்சிக்காரர்களிடம் தனது பிடியை நிருபிக்க வேண்டி ஜோசப் முன்னிலையில் அந்த வியபாரியை அழைத்து தனக்கு முன்னல் முட்டிக்கால் போடச்சொல்லி அவமானப்படுத்துகிறார் வக்கீல்.
ஜோசப் கே இன் கடைசி சந்திப்பு நகரத்தின் ஒரு சர்ச்சில் நடைபெறுகிறது. திடீரென திருக்கோயில் சமய உரை மேடைலிருந்து ஒரு குரல் கேயை பெயர்சொல்லி அழைத்து பேசத் துவங்குகிறது. சிறைப் புரோகிதராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பாதிரியார் இவனிடம் பேசத் துவங்குகிறார். அதாவது ஜோசப்பின் வழக்கு மிகவும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்றும் நீதி மன்றத்தின் இயல்பையே இவன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றும் மேலும் மற்றவர்களின் உதவியை குறிப்பாக பெண்களின் உதவியை அதிகமாக நாடுவதாயும் கூறுகிறார்.
இந்தச் சந்திப்பின் உச்சக்கட்டமாக பாதிரியார் ஒரு உருவகக் கதை ஒன்றை கூறுகிறார். இந்தக் கதையில் ஒரு மனிதன் சட்டத்த்தின் வாயிலில் நின்று கொண்டு உள்ளே போக முயற்சி செய்கிறான். ஆனால் வாயிற் காவலன் அவனை உள்ளே விட அனுமதி தற்போது கிடையாது என்று கூறிவிடுகிறான். பல வருடங்களாக அவன் அங்கு காத்துக்கிடக்கிறான், காவலனுக்கு லஞ்சம் கொடுக்கவும் முயற்சி செய்கிறான். அப்படியும் அவனுக்கு உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை. கடைசியில் இறந்தும் போகிறான் அவன். இறக்கும் தருவாயில் அவன் காவலனிடம் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று கேட்கிறான். உடனே வாயிற்காவலன் யாருக்கும் அல்ல ஆனால் உனக்கு இப்போது நுழைய அனுமதி கிடைக்கிறது இந்தக் கதவு உனக்காக மட்டுமே நான் அதை இப்போது அடைக்கப்போகிறேன் என்கிறான்.
இந்தக் கதையை கேட்ட ஜோசப் உடனே அந்த மனிதன் ஏமாற்றப்பட்டான் என்று பாதிரியாரிடம் கூறினான். ஆனால் பாதிரியார் இந்த உருவகக் கதையைப்பற்றி வாதப்பூர்வமாகப் பேசி ஜோசப் இன்னமும் உண்மையான பிரச்சனை பற்றி புரிந்து கொள்ளவில்லை என்றும் இந்த உருவகக் கதையை இவனுடைய நிலமைக்கும் பொருத்திப் பார்க்க முடியாமல் ஜோசப் குழப்பமடைந்துள்ளான் என்றும் கூறுகிறார்.
நாவலின் இறுதிப்பகுதி முதல் பகுதிக்குப்பின் நடக்கும் நிகழ்வாக வருகிறது. அன்று ஜோசப் கே யின் 31ஆவது பிறந்த நாள் இரண்டு மனிதர்கள் அவன் விடுதியின் கதவைத்திறந்து கொண்டு நுழைகிறார்கள். தனக்கு தண்டனைக் கொடுக்க வந்தவர்கள் அவர்கள் என்று ஜோசப் சந்தேகம் கொள்கிறான் எதிர்த்துப்போறாடும் மனவுறுதி அப்போது அவனிடம் இருக்கவில்லை. கடைசி கணத்தில் அருகிலிருக்கும் வீட்டின் ஜன்னல் பறந்து திறந்து கொள்கிறது, வெளிச்சத்திற்கு எதிராக அதன் வடிவம் தெரிகிறது அதிலிலிருந்து ஒரு உருவம் கருணையின் காரணாமகவோ அல்லது இரக்கத்தின்பாலோ உதவி புரியும் பாவனையுடன் தன் இரு கைகளையும் நீட்டுவதைப் பார்க்கிறான் ஜோசப் கே. அது என்னெவென்று கே கண்டு பிடிக்க முடியவில்லை. அப்போது ஒருவன் அவன் கழுத்தின் தொண்டை பகுதியை பிடித்துகொள்ள இன்னொருவன் ஜோசப்பின் மார்பில் கத்தியால் குத்துகிறான். ஜோசப் கே வாழ்வின் சுவடு தெருவில் அடிபட்டு இறக்கும் நாயைப் போல் சாகிறான்.
மரணமும் பயமும் வாழ்வின் அனைத்துக் கணங்களிலும் 'கே'-யை துரத்தி வந்த வண்ணம் இருக்கிறது. வாழ்க்கையே மரணத்தின் வலியாக மாறும்போது உண்மையான மரணம் வாழ்விலிருந்து அளிக்கப்படும் விடுதலையோ?
வாசிப்பு:
காஃப்காவின் இந்த நாவலைப் பொறுத்தவரையில் இரண்டு விளக்கங்கள் உண்டு. ஒன்று இறையியல், இரண்டாவது மனோவியல். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று நிராகரிப்பவையல்ல. உளவியல் வாசிப்பு அவர் சொந்த வாழ்வில் அவருக்கும் அவர் தந்தைக்கும் இருக்கும் உறவை மையப்படுத்தும் வகையில் அமைகிறது. அதாவது சர்வாதிகாரம் பெற்ற தந்தை முன்னால் மகன் ஒன்றும் செய்ய முடியாமல் போகும் நிலை இந்த நாவலில் உருவகமாக வருகிறது என்று கூறலாம்.
இதையே யூத-கிறித்தவ பின்னணியில் கூறினால் தந்தை சமயத்திற்கும் மகன் சமயத்திற்கும் உள்ள முரண்பாடாக விரித்துக்கூறுவர் இறையியல் அபிமானிகள்.
இந்த நாவலில் வரும் பல காட்சிகள் கனவுலகக் காட்சிகள் போல் வருகின்றன. நிகழ்வுகள் மாறி மாறியும் புதிர் தன்மை மிகுந்ததாகவும் சாதரண நிகழ்வுகள் கூட பயங்கர நிகழ்வுகளாக மாறிவிடுகின்றன. ஜோசஃப் தன் சாதாரண வீட்டுக் கதவையோ அல்லது தன் அலுவலகக் கதவையோ திறக்கலாம் ஆனால் அங்கோ வேறு விதமான உலகம் திறந்து அங்கு நீதிமன்றம் அதன் வேலைகளை செய்து கொண்டிருக்கும். அது போன்ற காட்சிப்படுத்தல்கள் உணர்வற்ற மனத்தின் அடக்கப்பட்ட மனப்பீதிகள் அன்றாட வாழ்வினுள்ளும் வன்முறையாக புகுந்து மனச் சஞ்சலத்தை உருவாக்குவதை அர்த்தப்படுத்துகிறது.
இறையியல் ரீதியான வாசிப்பு உளவியல் வாசிப்பை நிராகரிப்பதில்லை. ஜோசப்பின் குற்ற உணர்வு கண்ணுக்குத் தெரியாத கடவுள் மற்றும் ஊழல் நிறைந்த சட்டக்காவலர்கள், இவர்களுக்கு முன்னால் மனிதனின் நிலமை என்ன என்பதை பயங்கரமாக எடுத்துரைக்கிறது. கடவுள் மற்றும் அதைச்சார்ந்த அமைப்புகள் மீது இந்த நாவல் தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கிறது.
சட்டமும் அதை வழி நடத்துவதாகக் கோரப்படும் புனித ஆவியும் சட்டத்தின் முன்னால் குற்றவாளியாக்கப்பட்ட மனிதனுக்கு அவன் குற்ற உணர்வை அதிகரித்து அவன் தன் குற்ற உணர்வை (குற்றத்தை அல்ல) வெளிப்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தத்தை இந்நாவலின் நாயகன் ஜோசஃப் முறியடிக்கிறான். அவனால் குற்ற உணர்வுடன் கடவுளின், சட்டத்தின் முன் அடிபணிய முடியவில்லை . ஆகவே ஜோசப் கே யின் துன்பம், தோல்வி உண்மையில் கடவுளின் தோல்வியே.
காஃப்கா போன்ற மேதைகளின் இலக்கியங்களில் எப்போதும் மிகவும் செறிவான பல விளக்கங்கள் அடங்கியிருக்கும். இதை நாம் உளவியல் ரீதியாக வாசித்தாலும் அல்லது அரசியல், இறையியல் விளக்கம் அளித்தாலும் காஃப்காவின் விசாரனை அளவுக்கு நவீன யுகத்தின் மனக் கவலைகளையும், பீதிகளையும் வெளிப்படுத்தும் சிறந்த இலக்கியம் உருவாகவில்லை என்று தைரியமாகக் குறிப்பிடலாம்.
பிரதிபலிப்பு:
19ஆம் நூற்றாண்டு ஜனநாயக அரசுகளின் கீழ் ஒரு சாதரண மனிதனின் நிலை சட்டத்திற்கு முன் என்னவாக ஆகிறது என்பதையும், ஒரு சாதரண தினசரி வாழ்வில் சட்டம் உள்ளே நுழைந்து வெறும் பயத்தையும் குற்றவுணர்வையும் உச்ச கட்டமாக மரணத்தையும் அளித்து விட்டுச் செல்ல முடிகிறது என்பதையும் காஃப்கா மிக நுட்பமாக இந்த புதினத்தில் படைத்துள்ளார்.
சராசரி கல்வியுள்ள ஒரு ஜெர்மன் வங்கி ஊழியருக்கு நடக்கும் பயங்கரங்கள், சாதரண மக்களுக்கு உலகம் முழுதும் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பயங்கரவாதிகள் என்று முத்திரைக்குத்தி குவந்தனாமோ சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் பலர் பைத்தியங்களாகியுள்ளனர் என்பதை நாம் கேள்விப்படுகிறோம்.
இவ்வளவு பத்திரிக்கைகளும், செய்தி ஊடகங்களும், மனித உரிமை அமைப்புகளும் செயல்பட்டு வரும் இந்தியாவில் கூட, திடீர் கைதுகளும், குற்றம் என்னவென்று சொல்லப்படாமலேயே சிறைகளில் நீண்ட நாட்கள் வைத்திருக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தபடிதான் உள்ளன.தடா, பொடா சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறைகளில் (விசாரணை ஏதுமின்றி) வாடி, வாழ்வை இழந்து பரிதவிப்பதும், மறு புறம் "பெரிய மனிதர்கள்" தங்கள் "செல்வாக்கால்" குற்றங்களிலிருந்து நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு சுலப வழியில் நிரந்தர விடுதலைப் பெறும்போது, குற்றம் செய்தோமா? நாம் என்ன குற்றம்தான் செய்தோம், நம் சிறையிலிருந்து வெளியே வர முடியுமா? சட்டம் நமக்கு உதவுமா? யாராவாது நம்மை காப்பாற்ற மாட்டார்களா? என்று பீதியுடன் அப்பாவிகள் பலர் நம் இந்திய நாட்டின் சிறைகளில் பரிதவித்து வருகின்றனர்.
சட்டமும், ஆட்சி அதிகாரமும் மனிதாபிமான மதிப்பீடுகளை குழி தோண்டி புதைத்து வரும் இந்த காலக் கட்டத்திற்கும் காஃப்கா தனது புதினத்தை எழுதிய காலக்கட்டத்திற்கும் சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேல் இடைவெளி இருந்தாலும் அடிப்படையில் எதுவும் இன்னமும் மாறவில்லை. "சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்"- இது நம் செவியை குளிரச் செய்யும் தாரக மந்திரம்.
ஆம்! சட்டங்கள் வருவதற்கு "முன்" அனைவரும் சமமாகவே இருந்தனர்.