இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என ஏன் முத்திரைக் குத்தப்பட்டார்கள்?

லெனின் அகத்தியநாடன்

புதன், 6 ஜூலை 2016 (21:26 IST)
எனக்கு எண்ணற்ற இஸ்லாமிய நண்பர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். முஸ்தபா, அப்சர் கான், சாதிக் பாட்ஷா, தமிமில் முகமது, கலீல் ரஹ்மான், ரஹிம் மீரா, முஹமது இத்ரிஷ், பள்ளிக் காலத்தில் தாஜுதின், முகமது அப்பாஸ், சலீம் இன்னும் இன்னும் எத்தனையோ நண்பர்கள்.
 

 
இதுவரை நாங்கள் அனைவரும் சகோதரர்களாக பழகி வந்துள்ளோம். எங்கள் ஊரிலும் அப்படியே. தஞ்சாவூரி இளங்கலை கல்லூரியில் பயின்றபோது ஒரே தட்டில் சாப்பிட்டுள்ளோம். ஒரே கட்டிலில் உறங்கியுள்ளோம். எங்கள் வீட்டில் சாப்பிட்ட இஸ்லாமிய நண்பர்கள் பலர்.
 
உங்களில் பலருக்கும் கூட இந்த அனுபவங்கள் இருக்கும். பிறகு ஏன் உலகம் முழுவதிலும் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் காட்டப்படுகிறார்கள்.
 
அதற்கு ஒரே ஒரு காரணம் தான். இஸ்லாமிய நாடுகளில் உள்ள செல்வத்தை சுரண்டுவதற்கு துடிக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் வஞ்சகச் செயல்கள். குறிப்பாக, ஈராக், ஈரான், லிபியா, ஆஃப்கானிஸ்தான், சிரியா, துருக்கு, சூடான், துனிஷியா, துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேஷியா, ஜோர்டான், கிர்கிஸ்தான், ஏமன், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் எண்ணற்ற எண்ணெய் வளங்களும், கனிம வளங்களும் உள்ளன.
 
இந்த நாடுகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையை இஸ்லாமிய நாடுகள் கைப்பிடித்தன. அதற்காக சோஷலிச நாடுகளுடன், குறிப்பாக [சோவியத் யூனியனுடன் - இன்றைய ருஷ்யா] உற்பத்தி, பரிவர்த்தனை ராணுவ தளவாடங்கள் அனைத்திலும் கூட்டனி வைத்துக் கொண்டன.
 
இது அமெரிக்காவிற்கு எரிச்சலை கிளப்பியது. முதலில் சதாம் உசேன் என்ற ஒரு போராளியை அமெரிக்கா கண்டது. ஈராக்கில் சதாம் தலைமையில், சோவியத் எதிர்ப்பு நிலையை உண்டாக்க முயற்சித்தது.
 

சதாம் உசேன் மற்றும் மும்மர் கடாஃபி
முதலில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்புத் தந்த சதாம், சோஷலிச நாடுகளின் உண்மையான நிலைப்பாட்டைக் கண்டதும் அவர்களுடன் கைகோர்த்தார். மேலும், ஈராக்கின் செல்வ வளத்தை குவிக்க தன்னை அமெரிக்கா பயன்படுத்தியதையும் அறிந்தார்.
 
பிறகு தன்னை வெளிப்படையாக சோஷலிச நாடுகளிடம் நேசக்கரத்தை நீட்டினார். ’ஈராக் தேசம் ஈராக் மக்களுக்கே. ஏகாதிபத்திய நாய்களே வெளியேறுங்கள்’ என பகிரங்கமாக அறிவித்தார்.
 
அரபு நாடுகள் தங்கள் தேசத்து எண்ணெய்களின் விலையை அமெரிக்க டாலர்களில் நிர்ணயம் செய்யாமல் யூரோ நாணயத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சதாம் கூறினார்.
 
அதன் விளைவே, 30.12.06 அன்று இஸ்லாமிய மக்கள் கொண்டாடுகின்ற தியாகத் திருநாளின் (பக்ரீத் பண்டிகை) தொடக்க நாளில் சதாம் என்கின்ற ஒரு சிங்கம் பலி கொடுக்கப்பட்டது.
 
தொடர்ச்சியாக ஒசாம பின் லேடனை அமெரிக்கா இதே போன்ற தந்திரத்தை பயன்படுத்தி, சோவியன் யூனியன் உடைவதற்கு ஒரு காரணியாக பயன்படுத்தியது. பிறகு ஆப்கான் மக்களுக்கான தேசமாக மாற்ற பின்லேடன் முயன்றபோது, திட்டமிட்டே இரட்டைக் கோபுர நிகழ்வை சாக்காக வைத்துக்கொண்டு அவரை வேட்டையாட துடித்தது. பிறகு, 02-05-2011 அன்று பின்லேடன் கொல்லப்பட்டார்.
 


ஒமர் முக்தாரை கைது செய்து தூக்கிலிட அழைத்துச் செல்லும் இத்தாலிய வீரர்கள்
 
அதே போன்றுதான் மும்மர் கடாஃபி. கடாஃபி தனது நாட்டில் சீனாவின் முதலீட்டை அதிகரித்தார். பல அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவிற்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கினார். கடாஃபி ஒரு ஆபிரிக்க நாணய நிதியத்தை உருவாக்க முயன்றார்.
 
உலக எண்ணெய் வளத்திலேயே லிபியாவில் உள்ள எண்ணெய் வளம்தான் மிகத் தூய்மையானது. மும்மர் கடாஃபி எண்ணெய் விலையை தங்கத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறினார். அதன் விளைவே  2011ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி கடாஃபி நேட்டோ படையால் படுகொலை செய்யப்பட்டார்.
 
இப்படித்தான் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் மாற்றப்பட்டனர். அவர்கள் உலகிற்கு வழங்கிய செல்வங்கள், கலைப் பொருட்கள் எண்ணற்றவை.
 
1923 ஆம் ஆண்டு முதல் 1931ஆம் ஆண்டு வரை இத்தாலிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்ட வரலாற்றை உருவாக்கிய பாலைவனச் சிங்கம் ஒமர் முக்தார் [Omar Mukhtar ] காலம் முதல் இன்றுவரை அவர்கள் மீதான, ஏகாதிபத்திய நாடுகளின் தாக்குதல் இன்றும் தொடர்வதன் விளைவே இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என முத்திரைக் குத்தப்படுகிறது.

இன்றைக்கும் சிரியா போன்ற நாடுகளில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ், லஷ்கர்–இ–தொய்பா, அல்கொய்தா போன்ற அமைப்புகள் எல்லாம் மேற்கத்திய நாடுகளின் கைக்கூலிகளால் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.
 
We'll never surrender, we'll win or die you've to fight the next generation and the next..... and I'll live more than my hanger' - என்று ஒமர் முக்தார் முழங்கினார்.
 
சகோதரத்துவம் ஓங்கி வளருட்டம்... அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்..

வெப்துனியாவைப் படிக்கவும்