சுவாதி படுகொலை, வினுப்பிரியா தற்கொலை - யார் காரணம்?

லெனின் அகத்தியநாடன்

செவ்வாய், 12 ஜூலை 2016 (16:57 IST)
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலை பேசப்பட்டுள்ளது. குற்றவாளி குறித்து பலவித சந்தேகங்கள், வழக்கு குறித்த கேள்விகள், படுகொலையின் மீதே பலவித மர்மங்கள் என ஆள் ஆளாக்கு புலன் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
 

 
அதேபோல், சேலம் மாவட்டத்தில் வினுப்பிரியா என்ற பெண், தன்னுடைய புகைப்படத்தை மார்பிங் செய்து, ஆபாசமாக பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புகைப்படம் பதிவேற்றம் செய்தமைக்காக கூட இல்லை, தன்னுடைய பெற்றோர்களே தன்னை நம்பாமல் இருந்தமைக்காகவே தற்கொலை செய்துகொண்டதாக கடிதம் எழுதியுள்ளார்.
 
இது தவிர நாட்டையே உலுக்கிய செவிலியர் [நர்ஸ்] அருணா ஷான்பாக் மரணம். கடந்த 1973ஆம் ஆண்டு அருணா ஷான்பாக், தான் பணிபுரிந்து வந்த மருத்துவமனையிலேயே, அவருடன் பணி புரியும் பணியாளர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டதால் மூளை செயலிழந்தது.
 
அன்றுலிருந்து நினைவு திரும்பாமல் கோமா நிலையிலேயே வாழ்ந்து வந்த அருணா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் மரணமடைந்தார். அருணா ஏறத்தாழ 42 ஆண்டுகாலம் கோமாவில் இருந்து உயிர் நீத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல, உபேர் டாக்சி ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஒருவரின் மரணம், நிர்பயா மரணம். இது தவிர, மாதம் ஒருமுறையேனும் பெண்கள் மீது ஆசிட் வீச்சு, காதலிக்க மறுத்த பெண் மீது தாக்குதல் என பெண்கள் மீதான வன்முறை என நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
 
பெண்கள் மீதான் வன்தாக்குதல்கள் ஒருபுறம். மற்றொரு புறம், ஜாதிய படுகொலைகள், ஆணவக் கொலைகள், திருட்டு, கொள்ளை என செய்தி தாள்களிள் இது போன்ற செய்திகளுக்கு பஞ்சமே இல்லாமல் கொட்டிக்கிடக்கின்றன. சில சமயங்களில் செய்திதாள்களை புரட்டவே அச்சமாக இருக்கிறது.
 
அது மட்டுமல்லாமல், சமூகத்தின் மீதான நம்பகத்தன்மை குறைவாகவும், ஐயப்பாடுகள் அதிகரித்த வண்ணமும் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? சொந்த சகோதரனையும், சகோதரியையும் கொல்லத் துணியும் வன்மமான மனநிலை; சொந்த மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் கொடும் செயல் இவற்றிற்கெல்லாம் எது காரணமாக இருக்க முடியும்?
 
சமூக ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தான் முதல் காரணம். கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் யாரும் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருட முயன்றதில்லை. கோடிஸ்வரர்கள் யாரும் தெருவில் இறங்கி கொலை செய்வதில்லை.
 
உண்மையில், துன்பத்தில் உழலும் மக்களுக்கு ஆசையை காட்டி அவர்களை கூலிப்படையாக மாற்றுவதே இந்த பணக்காரர்களும் அரசியல்வாதிகளும்தான். இவர்கள் தங்களது சுயநலத்திற்காக அப்பாவி ஏழை மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவதன் விளைவுகளும் இதுவும் ஒன்றே.
 
மன்னன் எவ்வழி அவ்வழி மக்கள்:
 
ஆங்கிலேயர்களின் சுரண்டலில் இருந்து, ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெற்ற சுதந்திர இந்தியாவை, அதற்கு பின்னர் நம்மை ஆட்சி செய்த நமது அரசுகளால், மேலும் சுரண்டப்பட்டதின் விளைவு. சுதந்திரத்திற்கு பின்னர், கோடிக்கணக்கான கனவுகளோடு வாழத் தொடங்கிய மக்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியது.
 
ஒவ்வொரு அரசும் ஏதாவது ஊழல், சுரண்டல் வழக்குகளில் சிக்கியுள்ளது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மீது பாய்ந்த ஊழல் வழக்குகள். தேசிய அளவில் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி தொடங்கி இன்றைய மன்மோகன் சிங் வரையிலும் அது தொடர்கதை ஆகி வருகிறது.
 
ஏன், தற்போதைய இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி அரசு கூட, தனது பெருமுதலாளித்துவ கூட்டாளிகளான அதானி மற்றும் அம்பானியின் நிறுவனத்திற்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். இது போன்ற முதலாளிகள் நலன் அரசால் தங்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை எனும் உணர நேரும்போது அவர்களுல் குறுக்கு வழியில் பணம் தேடும் முயற்சியிலேயே ஈடுபடுவார்கள் என்பது சமூக உளவியல்.

இதுபோன்ற சாதாரண ஜனங்களுக்கு எதிராக அரசுகள் இருக்கும் பொழுது மக்கள் மட்டும் யோக்கியர்களாக இருப்பார்கள் என எண்ணுவது மடமை அல்லவா? ஆக, மன்னன் எவ்வழி அவ்வழி மக்கள்...
 
சினிமா, கலை, இலக்கியம்:
 
இறுதியாக நாம் காணும், கேட்கும் அனைத்தும் வன்முறை தொடர்பான காட்சிகளாக, தகவல்களாக உள்ளன. சினிமாவில் எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். போன்றோர் நல்லோர்களாக, நல்ல கதாபாத்திரங்களின் மூலம் மக்களிடம் ஒருவகையான ஒழுங்கமைவை கட்டியமைக்க முயற்சித்தனர். ஆனால், தற்போது வெளியாகும் 95 சதவீத விழுக்காடு சினிமாக்களில் மதுபான கடை இல்லாத சினிமா என்பதே இல்லை என்றாகிவிட்டது.
 
அதேபோல், எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி காலகட்டத்தில் வெளியான காதல் தோல்வி பாடல்கள் எல்லாம், ‘எங்கிருந்தாலும் வாழ்க’, ‘நினைக்கத் தெரிந்த மனமே’ என்ற வகையறாக்களில் இருந்தது. இளையராஜா, டி.ராஜேந்திரன் இசையில், ‘காதல் என்பது பொதுவுடமை’, ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்ற வகையிலான தன்னுணர்ச்சி பாடல்களின் நீட்சியின் சோக கீதமாக இருந்தது.
 
ஆனால், 2000 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான பாடல்கள் பெரும்பாலும், பெண்கள் மட்டும் ஏமாற்றுக்காரர்கள் போலும், ஆண்கள் எல்லாம் உண்மையாக காதலிப்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்டது. எனது சிறுவயதில், காதல் சோகத்தில் தாடியோடு, தனிமையாக ஒருவித ஏக்கத்தில் திரிந்த அண்ணன், மைத்துனர்மார்களை பார்த்ததுண்டு. குடிப்பவர்கள், சிகரெட் பிடிப்பவர்கள் கூட தமது சகோதரர்களுக்கு, தந்தைக்கு தெரியக்கூடாது என்று நினைத்து ஒளிந்து ஒளிந்து செய்ததுண்டு.
 
இன்றைக்கு எல்லோரும் அப்படி இருக்கவேண்டும் அப்படி கூற வரவில்லை. ஆனால், நாம் காணும் சினிமாக்கள், கதைகள், தொலைக்காட்சி நாடகங்கள் அதனை, ஒரு கதாநாயகத்தன்மை கொண்டதாக சித்தரிக்கத் தொடங்கிவிட்டார். எல்லா ஒழுக்கக்கேடு உடையவனையும் கதாநாயகன் ஆக்கப்பட்டான். நல்ல கவிதைகள் கிடையாது, நல்ல இலக்கிய படைப்புகளுக்கு பஞ்சம், நல்ல இசையை கேட்க முடியவில்லை. நல்ல ஓவியங்கள் இல்லை.
 
தற்போது வளரும் இளைஞர்களை தனி மனித சாகசத்தைப் புரியும் ஒரு ‘சர்க்கஸ்காரனை’ போல மாற்றிவிட்டார்கள். மனித வாழ்வில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவதில் இதுபோன்ற கலை, இலக்கியங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதையும் அரசுகள் உணர வேண்டும்.
 
மனித மனத்தில் நஞ்சை ஊற்றும் இது போன்ற விஷயங்கள் தொடர்ந்தால் நிச்சயம் இது போன்ற கொலை, கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்தவே முடியாது. வெறும், சிறையையும், காவல் துறையும், நீதிமன்றமும் மட்டுமே குற்றச்செயல்களை சத்தியமாக ஒழித்துவிட முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்