தமிழக சட்டசபைக்கு வருகின்ற மே மாதம் 15ஆம் தேதி வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் பல்வேறு சிறிய கட்சிகள் புதிது புதிதாக முளைத்து வருகின்றன.
தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் இன்னும் தங்களது கூட்டணியை உறுதிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இதனால், வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை, தொகுதிப் பங்கீடுகள் என எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறுகின்றன.
பாமகவும், மக்கள் நல கூட்டணி மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டுள்ளன. திமுகவில் மு.க.ஸ்டாலின் மட்டும் ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முதற்கட்ட சுற்றுப்பயணத்தை நடத்தி முடித்துள்ளார்.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் ஒரே வாரத்தில் 3 புதிய கட்சிகள் உதயமாகியுள்ளன. இதற்கிடையே 300-க்கும் அதிகமான சிறிய கட்சிகள், பெரிய கட்சிகளின் பார்வைக்காக காத்திருக்கின்றன.
வழக்கம்போல இந்த சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டும் புதிய கட்சிகள் பல வெளியே வர ஆரம்பித்துள்ளன. இதன்படி, இந்த தேர்தலுக்காக தொடங்கப்பட்ட முதல் கட்சி பச்சைத் தமிழகம். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த சுப.உதயகுமார் அதனைத் தொடங்கினார்.
மனித நேய மக்கள் கட்சியை உரிமை கொண்டாட முடியாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தமிமுன் அன்சாரிக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்கவே, அவர் மனிதநேய ஜனநாயகக் கட்சி என்னும் அரசியல் கட்சியை கடந்த வாரம் தொடங்கினார்.
அதேபோல, அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜூம், அப்துல் கலாம் இந்திய லட்சியக் கட்சி என்னும் கட்சியை கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். அந்தக் கட்சி காந்திய மக்கள் இயக்கத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
தெலுங்கு செட்டியார்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா, திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை 2 தினங்கள் முன்பு தொடங்கினார். ஆரம்பம் முதலே அதிமுக ஆதரவாளராக இருந்து வந்த அவர், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக தெரிகிறது.
சரத்குமாரின் சமகவிலிருந்து நீக்கப்பட்ட எர்னாவூர் நாராயணன் எம்.எல்.ஏ, புதியக்கட்சி தொடங்குவது பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், இதுபற்றி இன்னும் ஒரு வாரத்துக்குள் அவர் அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் தெரிகிறது. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பேதான் அதிமுகவை ஆதரிப்பேன் என்று அவர் அறிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் புதிதாக கட்சி தொடங்கப்படுவது ஒருபுறமிருக்க, கட்சித் தொடங்கப்பட்டதற்கான சுவடு ஏதுமின்றி, 300க்கும் அதிகமான கட்சிகளும் புறப்பட்டுள்ளன.
கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம், தலித் மக்கள் முன்னணி, ராஜீவ் மக்கள் காங்கிரஸ், பாரதிய பார்வர்டு பிளாக், அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக், விடுதலை விரும்பிகள் கட்சி, சோசலிஸ்ட் ஜனதா, தமிழ்நாடு படித்த வேலையற்ற இளைஞர்கள் இயக்கம் உட்பட 300க்கும் அதிகமான கட்சிகள் பெரிய கட்சிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான லெட்டர் பேட் கட்சிகளும் படையெடுத்துள்ளன.
இந்த கட்சிகள் பல்வேறு நோக்கங்களுக்காக, பல்வேறு ஆதாயங்களுக்காக தோன்றினாலும், தேர்தல் நேரத்தில் தோன்றுவதன் மூலம் பெரிய கட்சிகளிடம் சிறிய அளவிலான பிரதிநிதித்துவம் அல்லது லாபங்களை ஈட்டமுடியும் என்பதாலேயே தான் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் பெரிய கட்சிகளுக்கும் வாக்குகள் சிதறப்போகாமல் இருப்பதற்கு, இதுபோன்ற சிறிய கட்சிகளை ஆதரிக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எது எப்படியாகினும், தேர்தலை ஒட்டி புதிய கட்சிகள் முளைப்பதும், பின்னர் காலாவதியாகி விடுவதும் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன.