மக்கள் நலன் விஜயகாந்த் நலனாக மாறிவிட்டதா?

லெனின் அகத்தியநாடன்

வியாழன், 24 மார்ச் 2016 (17:33 IST)
எந்த கட்சியும் கூட்டணி குறித்த பேசாத பொழுதே, தேர்தல் களம் சூடுபிடிக்கும் முன்பே மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தது.


 

 
இன்னும் சொல்லப்போனால் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த சில நாட்களிலேயே ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த வைகோ, தேர்தலுக்குப் பின், வைகோ, பாஜகவின் நிலைப்பாட்டிற்கு எதிராகவும், பிரதமர் மோடியையும் வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார்.
 
ஆனாலும், பாஜக தரப்பு கூட்டணியில் வைகோ இருக்கிறார் என்றும், மாறாக அவர் பிரதமரை வெளிப்படையாக விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியது. பிறகு தொடர்ந்து வந்த மோதலை அடுத்து வைகோ பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
 
பின்னர், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தன. அதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
பின்னர், நவம்பர் 12ஆம் தேதி குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையை கூட்டியக்க தலைவர்கள் இணைந்து வெளியிட்டனர். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கம், மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் செயப்ல்படும் என்று அறிவித்தனர்.
 
மேலும், ”தமிழகத்தை அதிமுக ஊழலில் திளைக்க வைத்த திமுக வும் அதன் தலைவரின் மொத்த குடும்பமும் ஊழலில் சிக்கி தவிக்கிறது. ஊழல் நாணயத்தின் இரு பக்கங்கள் அதிமுக, திமுக. இதிலிருந்து விடுபடவே மக்கள் நல கூட்டியக்கம்” எனவும் வைகோ தெரிவித்தார்.
 
அதன்பிறகு, பொதுமக்கள் பிரச்சனைகள் அனைத்திலும் நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து, மக்கள் நல கூட்டியக்கமாக செயல்பட்டது.
 
இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்தை தங்களது கூட்டணிக்குள் இழுக்க பாஜக, திமுக, மக்கள் நலக் கூட்டணி ஆகிய கட்சிகள் முயன்றன. பல்வேறு கட்ட இழுபறிக்குப் பிறகு நேற்று விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைவதாக அறிவிக்கப்பட்டது.
 
மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு 124 இடங்கள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு தொகுதி ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த அறிவிப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
 
அப்போது பேசிய வைகோ, மக்கள் நலக் கூட்டணி இனிமேல் விஜயகாந்த் கூட்டணியாக செயல்படும் என்று அறிவித்தார். விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் இணைந்தது அந்த அணிக்கு நிச்சயம் பலம் தரும் என்பது சரியானதுதான்.
 
ஆனால், அதற்காக இதுவரை மக்கள் பிரச்சனைகளில் மட்டும் கவனம் செலுத்தி, திமுக, அதிமுகவிற்கு நாங்கள்தான் மாற்று என்று கூறிவந்த அந்த அணி, திடீரென்று தங்களது கொள்கைகளை மாற்றிக்கொண்டது போல் இப்படியான அறிவிப்பை வைகோ வெளியிட்டது ஏன்?
 
மக்கள் நலக் கூட்டணியில் முதல் அமைச்சர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம். அது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. சட்டமன்றத் தேர்தல் முடிந்து உறுப்பினர்கள் தான் முதல் அமைச்சரை தேர்வு செய்வார்கள் என்று கூறியிருந்த வைகோ, தற்பொழுது விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்தது ஏன்?
 
மொத்தத்தில், தேர்தல் கூட்டணி என்று வந்தால், தாங்கள் இதற்கு முன்பு கூறிய கருத்துகளையும், தங்கள் கட்சியின் கொள்கையையும் காற்றில் பறக்க விடும், மற்ற அரசியல் கட்சிகள் மாதிரிதான் செயல்பட்டிருக்கிறது மக்கள் நலக் கூட்டணி.

வெப்துனியாவைப் படிக்கவும்