திமுக வேட்பாளர் பட்டியல் - ஓர் அலசல்

லெனின் அகத்தியநாடன்

வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (15:58 IST)
வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், தேர்தல் அறிக்கைகள், கூட்டணிகள், தொகுதி ஒதுக்கீடு ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருகின்றன.
 

 
இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி புதன்கிழமை அன்று மாலை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் வெளியிட்டார். திமுக போட்டியிடவுள்ள 173 தொகுதிகளுக்குமான மொத்த வேட்பாளர்களை ஒரே பட்டியலில் அறிவித்துள்ளார்.
 
முன்னதாக திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 41, மனிதநேய மக்கள் கட்சிக்கு 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5, புதிய தமிழகம் கட்சிக்கு 4, மக்கள் தேமுதிக 3, பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு 1, சமூக சமத்துவப்படை கட்சிக்கு 1, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சிக்கு 1 ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.
 
பெண் வேட்பாளர்கள்:
 
மொத்தமுள்ள 173 வேட்பாளர்களில் 19 பேர் பெண்கள். கடந்த 2011 தேர்தலில் திமுக 119 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 11 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது.
 
வாய்ப்பு இல்லை:
 
கடந்த 2011 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட 119 பேரில் 50 பேருக்கு வாய்ப்பு தரவில்லை. அதேபோல, 25 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 4 மாநகர செயலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
 
மேலும், கடந்த 2011 தேர்தலில் வென்ற 23 எம்எல்ஏக்களில் புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் அமைச்சர்கள் கே.ராமச்சந்திரன், சுப.தங்கவேலன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை
 
வாரிசுகள்:
 
சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன், டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை, அன்பில் பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ஆ.ராஜேந்திரன், என்.வி.என்.சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி, சுப.தங்கவேலனின் மகன் சுப.த.திவாகரன், பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் மகன் பி.டி.ஆர்.பி. தியாகராஜன், மு.கண்ணப்பனின் மகன் மு.க.முத்து ஆகியோருக்கு 
 
மீண்டும் வாய்ப்பு:
 
மு.க.ஸ்டாலின், தங்கம் தென்னரசு, துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன், உள்ளிட்ட 18 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
அன்பழகன், ஆற்காடு வீராசாமி இல்லை:
 
திமுகவின் பொதுச்செயலாளார் க.அன்பழகன் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்பழகன் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும், அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்