மீண்டும் போராடுவோம் - அரசுக்கு கெடு வைத்த இளைஞர்கள்

திங்கள், 23 ஜனவரி 2017 (16:06 IST)
தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் மூலம் என்ன நடக்கிறது என்பதை 2 அல்லது 3 மாத காலம் பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்துள்ளோம் என சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு வேண்டி போராடிய போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.


 

 
ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 15ம் தேதி முதல் போராட்டத்தை துவக்கினர். 
 
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், போராட்டக்காரர்கள் அதை ஏற்க மறுத்து, தங்களுக்கு நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும் எனக்கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது அந்த போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது.  
 
மதுரை அலங்கநல்லூரில் வருகிற பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அந்த ஊர் கமிட்டி முடிவு செய்துள்ளது. அதேபோல், மார்ச் 31ம் தேதி வரை அரசின் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை தற்காலிகமாக போராட்டத்தை கை விடுவது நல்லது என  ஜல்லிக்கட்டு ஆர்வலர் சேனாதிபதி  நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், நீண்ட நேரத்திற்கு பின் சென்னை மெரினா கடற்கரையில் நடந்து வந்த போரட்டம் முடிவிற்கு வந்துள்ளது. அந்த போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ள போராட்டக்காரர்கள் “ஆளுநரின் கையெழுத்திட்டுள்ள அவசர சட்டத்தின் நகல் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2 அல்லது 3 மாதங்கள் வரை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்த பார்க்க முடிவு செய்துள்ளோம். தமிழக அரசின் நடவடிக்கையில் எங்களுக்கு நம்பிக்கை வரவில்லை எனில் மீண்டும் போராட்டம் நடத்துவோம்’ என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்