திருவல்லிக்கேணி காவல் நிலையம் மீது தாக்குதல் - வாகனங்கள் தீ பிடித்து எரிவதால் பதட்டம்
திங்கள், 23 ஜனவரி 2017 (11:55 IST)
சென்னை மெரினா கடற்கரையில் இருந்து, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுட்டு கொண்டிருக்கும் நிலையில், திருவல்லிக்கேணி காவல் நிலையம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அதிகாலை முதல் சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வெளியேற மறுத்துவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
சென்னை மெரினா கடற்கரையில், போராட்டத்தை கைவிட மறுத்த இளைஞர்கள் தொடர்ந்து கடலின் அருகில் சென்று மனித சங்கிலி அமைத்து போராடி வருகின்றனர். மேலும், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த பலர் மெரினாவிற்கு வர முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து, அங்கிருந்து அனுப்பினர். இதில் கோபமடைந்த அவர்கள் மீது போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், கோபமடைந்த போராட்டக்காரர்கள் திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் உள்ள காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். அதில் சிலர் காவல் நிலையம் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது தீ வைத்தனர். இதில் பல வாகனங்கள் தீக்கு இரையாகின. தீ கொளுந்து விட்டு எரிவதால், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று அவற்றை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.